Mon. Mar 23rd, 2026


திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்குட்பட்ட கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள புதுப்பாளையம் ஒன்றியத்தின் நரசிங்கநல்லூர் ஊராட்சியில், வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த ஊராட்சியில் மொத்தம் ஐந்து வார்டுகள் உள்ளன. இதில் முதல் மற்றும் இரண்டாவது வார்டுகளில் மட்டும் சுமார் 900-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். ஆனால், தற்போதைய வாக்குச்சாவடி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளதால், பொதுமக்கள் வாக்களிக்கச் செல்ல பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆற்றங்கரை கடக்கும் அவல நிலை…?

வாக்குச்சாவடி செல்லும் வழியில் செய்யாற்றங்கரை கடந்து செல்ல வேண்டிய நிலை இருப்பதால், மழைக்காலம் மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் இது மேலும் ஆபத்தானதாக மாறுகிறது. இதனால், மாற்றுத்திறனாளிகள், முதியோர் மற்றும் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

பாதுகாப்பான போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால், பலர் வாக்களிக்கச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மக்களின் கோரிக்கை…!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, முதல் மற்றும் இரண்டாவது வார்டு பகுதிகளில் தனியாக வாக்குச்சாவடி அமைக்க வேண்டும் என ஊர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் முன்வைத்துள்ளனர். தேர்தலில் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டிய அவசியம்.

வாக்குரிமை என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை என்பதால், அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் மக்கள் வாக்களிக்க முடியாத நிலை உருவாகக் கூடாது என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து, நரசிங்கநல்லூர் பகுதியில் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS