24.12.2025
பெரம்பூர் – திரு.வி.க நகர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் மின் சிக்கன வார விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மாலை பெரம்பூர் திரு.வி.க நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் பொதுமக்களுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெரம்பூர் மின் கோட்டத்தின் சார்பில்,
திரு. பழனிவேல், மேற்பார்வை பொறியாளர் – சென்னை வடக்கு திட்டம்,
திரு. ரவிசங்கர், செயற்பொறியாளர் – பெரம்பூர் மின் கோட்டம்
ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மின் சிக்கனத்தின் அவசியம், மின்சாரத்தை வீணாக்காமல் பயன்படுத்தும் வழிமுறைகள், வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் சாதனங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது, மின் விபத்துகளைத் தவிர்ப்பது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், மின் சாதனங்களை சரியான தர நிலையுடன் பயன்படுத்துதல், பழுதடைந்த வயரிங் மற்றும் மின் இணைப்புகளை உடனடியாக சீரமைத்தல், மின்சார சேமிப்பின் மூலம் குடும்பச் செலவுகளை குறைப்பது உள்ளிட்ட நடைமுறை அறிவுரைகளும் எடுத்துரைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மின் சிக்கனம் – நம் பொறுப்பு என்ற வாசகத்துடன் பொதுமக்கள், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து மனித சங்கிலி அமைத்து, மின் சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தினர். இதன் மூலம் பொதுமக்களிடையே மின்சார சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பூர் மின் கோட்டத்திற்குட்பட்ட பொறியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மின் சிக்கன உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
தமிழ்நாடு டுடே
செய்தியாளர் – எம். யாசர் அலி

