புதுக்கோட்டை, நவம்பர் 13:
வரவிருக்கும் நவம்பர் 15 (சனிக்கிழமை) மற்றும் நவம்பர் 16 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வு (TNTET) தாள் 1 மற்றும் தாள் 2 தேர்வுகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாகவும், எவ்வித புகாருமின்றி நடைபெற வேண்டும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (தொடக்கக்கல்வி) பொன்னையா அவர்கள் தெரிவித்தார்.
இதை முன்னிட்டு, புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் கூ. சண்முகம் வரவேற்புரையாற்றினார்.
தலைமை தாங்கி பேசுகையில் இணை இயக்குநர் பொன்னையா கூறியதாவது:
“15 மற்றும் 16 நவம்பர் தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதி தேர்வில் பணியாற்றும் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் – அனைவரும் ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ள கையேட்டை முழுமையாகப் படித்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை நன்கு நிறைவேற்ற வேண்டும்.
எந்தவித குற்றச்சாட்டுகளும் எழாதவாறு புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்வுகளை முழு ஒழுங்குடன் நடத்த வேண்டும்,” என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் முனைவர் ஆரோக்கியராஜ், மாயக்கிருஷ்ணன், கலாராணி, பழனிவேல், தொடக்கக்கல்வி அலுவலர் (பொது) ராஜூ, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர் செந்தில், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் முருகையன், வெள்ளைச்சாமி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், கண்காணிப்பாளர் வளர்மதி ஆகியோர் உட்பட, தேர்வில் நியமிக்கப்பட்ட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: எம். மூர்த்தி, மாவட்ட தலைமை செய்தியாளர், புதுக்கோட்டை
