பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் திறன் மாணவர்களின் முன்னேற்றத்தை விவாதிக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் பேச்சு.
புதுக்கோட்டை, நவம்பர்7, புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் , ஆதிதிராவிடர் நலம், மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கூட்டம் இன்று 07-11-2025 ( வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் தலைமை தாங்கி கூட்டத்தினை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, வருகிற 15 , 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவற்றினை எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் நடத்திடவேண்டும். கல்வி உதவித்தொகை சார்ந்து வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைத்தல் மற்றும் கைரேகை பதிவு செய்யும் புதுப்பித்தல் பணியினை துரிதப்படுத்திடவேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்களை உடனுக்குடன் கல்வியியல் தகவல் மேலாண்மை முறைமையில் ( எமிஸ்) பதிவேற்றம் செய்தல் வேண்டும். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு தொடர் செயல்பாடுகளை தொடர்ந்து பள்ளிகளில் நடத்தப்படவேண்டும். மின்னஞ்சல் மற்றும் கல்வித்துறை புலனக்குழுவில் அனுப்பப்படும் தகவல் சார்ந்து தலைமை ஆசிரியர்கள் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நலன் சார்ந்து அளிக்கப்படும்தொகைக்கான பயன்பாட்டுச் சான்றிதழை உடனுக்குடன் சமர்பிக்கவேண்டும்.
குறிப்பாக 6- ம் வகுப்பு முதல் 9- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் திறன் இயக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவு அடையும் பொருட்டு அரையாண்டுத்தேர்வு வரை திறன் புத்தகத்தில் அடிப்படை கற்றல் விளைவு பகுதியை தொடர்ந்து பயிற்சி அளிக்கவேண்டும். தினம் ஒரு பாடம் என 2 பாடவேளைகள் திறன் பாடவேளையாக நடத்தவேண்டும்.ஒரு பாடவேளை 90 நிமிடங்கள் இருக்கவேண்டும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தலைமையாசிரியரே கால அட்டவணையினை தயார் செய்யவேண்டும். 90 நிமிட பாடவேளையில் கற்றல் விளைவு அடையாத மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் விளைவு பகுதியில் முதல் 15 பாடங்களை நடத்தவேண்டும். மேலும் இதே பாடவேளையில் கற்றல் விளைவு அடைந்த மாணவர்கள் மற்றும் திறன் அல்லாத மாணவர்களுக்கு திறன் பயிற்சிப் புத்தகத்தில் உள்ள இன்றியமையாத கற்றல் விளைவு பகுதியை கற்பிக்கவேண்டும். திறன் இயக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் திறன் மாதாந்திர மதிப்பீட்டில் பங்குபெற வேண்டும்.நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர தேர்வு 25-11-2025 முதல் 27-11-2025 வரை நடைபெற உள்ளது.காலாண்டுத்தேர்வு போல அரையாண்டுத்தேர்வும் நடத்தப்படும். பள்ளி அளவில் வாராந்திர கூட்டம் தலைமையாசிரியர் தலைமையில் நடத்தப்படவேண்டும்.
முக்கியமாக பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் திறன் மாணவர்களின் முன்னேற்றத்தை விவாதிக்கவேண்டும். திறன் மாணவர்களின் செயல்பாட்டினை கண்காணிக்கும் பொருட்டு புதிய டேஸ்போர்டு உருவாக்கப்பட்டு திறன் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை பார்வையிடுபவர்களின் கல்வியியல் தகவல் மேலாண்மை முறைமையின் உள் நுழைவில் வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாணவர்களின் வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைத்தல் மற்றும் கைரேகையினை புதுப்பித்தல் குறித்து இந்திய அஞ்சலக வங்கியின் முதுநிலை மேலாளர் மகேஸ்வரன், இந்திய நிதி ஆயோக்கின் அனுமதி பெற்ற ஏர்டெல் பேமென்ட் வங்கியின் அலுவலர் கண்ணதாசன் ஆகியோர் பங்கேற்று விளக்கினார்கள்.
இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர் ஆரோக்கியராஜ், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் தமிழரசன், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ( மேல்நிலை) முருகையன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி : M. மூர்த்தி, மாவட்ட தலைமை செய்தியாளர், புதுக்கோட்டை.
