Sun. Oct 5th, 2025



பல நூற்றாண்டுகளாக இந்து சமூகத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்படவில்லை. கூட்டுக் குடும்பச் சொத்துகளில் ஆண்களுக்கே உரிமை உண்டு; பெண்கள் வாழ்நாள் பராமரிப்பு உரிமையுடன் மட்டுமே வாழ வேண்டிய நிலை இருந்தது.

1937 – விதவைகளுக்கு வாழ்நாள் உரிமை

இந்த நிலையில் மாற்றம் கொண்டு வர, 1937-ல் பிரிட்டிஷ் அரசு இந்து விதவை வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, கணவன் இறந்தால், அவரின் பங்கு விதவைக்கு கிடைக்கும். ஆனால் அது வாழ்நாள் அனுபவ உரிமை மட்டுமே; விற்பனை செய்ய முடியாது.

1956 – புதிய வாரிசுரிமைச் சட்டம்

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1956-ல் இந்து வாரிசுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

பெண்களின் வாழ்நாள் உரிமை, முழு சொத்துரிமையாக மாற்றப்பட்டது.

தனிச் சொத்திலும், தந்தை வழி சொத்திலும் பெண்களுக்கு பங்கு வழங்கப்பட்டது.

ஆனால் பூர்வீகச் சொத்துகளில் மகன்களுக்கு மட்டுமே உரிமை இருந்து வந்தது.


1989 – தமிழ்நாடு திருத்தம்

தமிழ்நாடு அரசு 1989-ல் சட்டம் திருத்தி, மகள்களுக்கும் மகன்களைப் போல பூர்வீகச் சொத்தில் சம உரிமை வழங்கியது. ஆனால், 1989 மார்ச் 25-க்கு முன் திருமணம் ஆன மகள்களுக்கு உரிமை இல்லை; அந்த தேதிக்குப் பிறகு திருமணம் ஆனவர்களுக்கும், திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்கும் உரிமை உண்டு என்கிறது.

2005 – மத்திய திருத்தம்

மத்திய அரசு 2005-ல் சட்டத்தை திருத்தி, இந்தியா முழுவதும் மகள்களுக்கும் மகன்களைப் போல பூர்வீகச் சொத்தில் பங்கு வழங்கியது. திருமணமானவரா, இல்லையா என்பதில் வித்தியாசம் இல்லை.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு – 2020

சட்டத்தில் ஏற்பட்ட குழப்பங்களை தெளிவுபடுத்த, உச்ச நீதிமன்றம் 11-08-2020-ல் Vineeta Sharma v. Rakesh Sharma வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பை வழங்கியது.

“தந்தை உயிருடன் இருந்தாலும், இறந்திருந்தாலும், மகள் பிறந்தவுடன் பூர்வீகச் சொத்தில் பங்கு பெறும் உரிமை உண்டு. 2005 திருத்தம் பின்நோக்கி (retroactive) செயல்படும்.”


இதன்படி, 20-12-2004க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட பாகப்பிரிவுகளைத் தவிர்த்து, பூர்வீகச் சொத்து எங்கு பாகம் ஆகாமல் இருந்தாலும், அதில் மகளுக்கும் மகனுக்கும் சம பங்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.

தொகுப்பு:

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள்

By TN NEWS