Sun. Oct 5th, 2025

சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி செப்டம்பர் 12, 2025 அன்று துவங்கி, அக்டோபர் 5, 2025 வரை நடைபெற உள்ளது.

முதலமைச்சர் சுய உதவிக் குழு மகளிரின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார். அதன் பயனாக, இன்று சுய உதவிக் குழுக்கள் தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டியும், பொருளாதார சுயசார்பும் பெற்று வருகின்றனர். அவர்களின் உற்பத்திப் பொருட்கள் அனைவரையும் சென்றடையவும், நியாயமான விலை கிடைக்கவும் மாநில, மாவட்ட, வட்டார அளவுகளில் இத்தகைய விற்பனைக் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சியில், சுய உதவிக் குழுக்கள் தயாரித்த கொலு பொம்மைகள், பட்டு மற்றும் பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் பொருட்கள், மரச் சிற்பங்கள், மூலிகைப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.

மேலும், அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளுக்கென தனி அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வார இறுதி நாட்களில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இலவச வாகன நிறுத்துமிட வசதியும் உண்டு.

எல்லோரும் இக்கண்காட்சிக்கு வருகை தந்து, தரமான பொருட்களை வாங்கி பயன்பெறுவதோடு, சுய உதவிக் குழு மகளிரின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள்

By TN NEWS