கடையநல்லூர், செப்டம்பர் 5:
கடையநல்லூர் அருகே பெண் ஒருவர் மலைப்பகுதியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த கடனுக்காக வீட்டை கிரயம் எழுதி தருமாறு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி வளையர்குடியிருப்பு, முருகன் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லட்சுமி (50). தம்பதியருக்கு 3 மகன்கள் உள்ளனர். குடும்பம் கேரளாவில் தங்கி கூலித் தொழிலில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி மாலை லட்சுமி, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குதித்து உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக சொக்கம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பாட்டாகுறிச்சி பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாணிக்கராஜிடம், லட்சுமி 7 லட்சம் ரூபாய் வட்டிக்கடன் வாங்கி வீடு கட்டியதும் தெரியவந்தது. அசல் தொகையும் வட்டியும் கேட்டு, 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டை அடமானம் எழுதி வாங்கியதாகவும் தகவல் வெளியாகியது.
அதோடு, மேலும் பணம் கோரி, கேரளா சென்று கணவன்-மனைவியை அழைத்து வந்து, வீடு கிரயம் எழுதி தருமாறு மிரட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த மன அழுத்தத்தால் லட்சுமி தற்கொலைக்கு உட்பட்டது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மாணிக்கராஜை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பு செய்திகள்:
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.