திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளி பக்கத்தில், வடமாநில கூலித் தொழிலாளர்கள் தங்கி வசித்து வந்துள்ளனர். நேற்றிரவு மாடிப்படியில் ஏறியபோது, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அமரேஷ்பிரசாத் என்ற தொழிலாளர் காலிடறி கீழே விழுந்ததில், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் உயிரிழந்தார்.
இவ்விழப்பைத் தொடர்ந்து, இறந்தவரின் குடும்பத்துக்கு ₹5 லட்சம் இழப்பீடும், உடலை சொந்த ஊருக்குப் விமானம் மூலம் அனுப்பும் பொறுப்பையும் ஒப்பந்த நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து வடஇந்திய தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கி, சாலை மறியலும் நடத்தினர். அதற்கிடையில், நிலைமை கட்டுக்கடங்காமல் போக, போலீசாருக்கு எதிராக கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பத்துக்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் தலையில் காயமடைந்து தற்போது சிகிச்சையில் உள்ளார். சில ஊடகப்பணியாளர்களும் காயமடைந்துள்ளனர்.
இது தனி சம்பவமல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடந்த போராட்டத்திலும் போலீசார் கடுமையாக தாக்கப்பட்டிருந்தனர். அப்போதும், சம்பள உயர்வு கோரி போராடிய தொழிலாளர்களை விசாரிக்கச் சென்ற போலீசார், உடல் முழுவதும் காயங்களுடன் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த முறை காட்டுப்பள்ளியில் வசித்திருந்த வடஇந்தியர் எண்ணிக்கை நூறுக்கும் குறைவாக இருந்தும், போராட்டத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர் என்பது பெரும் கேள்விக்குறி. போலீசார் மீதான தாக்குதலுக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.
“இன்றைய குற்றம், நேற்றைய தொடர்ச்சி” என்று சொல்வார்கள். முந்தைய தாக்குதல்களுக்கான தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இன்று இந்தச் சம்பவம் இவ்வளவு பெரிய அளவுக்கு வளர்ந்திருக்காது. மாவட்ட, உள்ளூர் நுண்ணறிவு பிரிவுகள் சரியான தகவல் திரட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், போலீசார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலை உருவாகியிருக்காது.
இந்த நிலை தொடராமல் தடுக்க, சம்பவ இடங்களில் போதிய முன்தயாரிப்புடன் பாதுகாப்புப் படையினரை நியமிக்க வேண்டியது அவசியம். இல்லையேல், இது ஒரு தொடர்கதையாக மாறும் அபாயம் அதிகம்.
✍️ ந. பா. சேதுராமன்
02.09.2025
🗞️தொகுப்பு: சேக் முகைதீன்
#MKStalin #TamilNaduPolice #Kattupalli