Sun. Oct 5th, 2025

*முதலிபாளையம் பகுதியை திருப்பூர் மாநகராட்சியின் குப்பைக் காடாக மாற்றாதே!*

திருப்பூர் மாவட்டம், தெற்கு தாலுக்காவிற்கு உட்பட்ட முதலிபாளையம் புல எண்: 393 மற்றும் நல்லூர் புல எண்: 354 பகுதியில் காலாவதியான தனியார் பாறைக்குழிகளில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சட்டவிரோதமாக பல்வேறு வகையான (இறைச்சிக்கழிவு, மருத்துவக்கழிவு, ரசாயனக்கழிவு, தொழில்கழிவு, நச்சுக்கழிவு, காஸ்டிங் கழிவு, பிளாஸ்டிக் கழிவு, கண்ணாடி கழிவு மற்றும் பல குப்பைகளை கொட்டி வருகிறது.

இவ்வாறு தரம் பிரிக்கப்படாத, வகைப்படுத்தப்படாத பல்வேறு வகையான கழிவு குப்பைகளை ஒன்று சேர்த்து கொட்டுவதால் விஷவாயு வெளியேறி நீர், நிலம், காற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்பட்டு கடுமையான சுகாதார பாதிப்பை உருவாக்கி கொண்டிருக்கிறது.

இதனால் சுற்றி இருக்கும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு குடியிருக்க முடியாத, நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலை ஏற்படுவதுடன் பொதுமக்கள், கால்நடைகள்,விவசாயம், விவசாயிகள் என எதிர்கால சந்ததிகளே வாழ முடியாத அளவிற்கு அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

மேலும் தோல் நோய், புற்றுநோய், சுவாச கோளாறு, காய்ச்சல், தொடர் இருமல், மலட்டுத்தன்மை, சர்க்கரை நோய் என வாழ்க்கையையே அழிக்கக்கூடிய பல நோய்களும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் கடமை சுத்தமான சுகாதாரமாக வாழக்கூடிய உரிமை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. இதனை தடுக்க எந்த அரசிற்கும், அதிகாரிகளுக்கும் உரிமையில்லை. மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டியதும், அதனை பாதுகாக்க வேண்டியதும் அரசின் பொறுப்பு ஆனால் சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டு அதனை தவறாக பயன்படுத்தி வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் பல நூறு கோடி ஊழல் செய்து அதனை மூடி மறைக்க தொடர்ந்து காலாவதியான பாறைக்குழிகனைத் தேடித் தேடி சென்று கொட்டி அப்பகுதியில் காற்று மூலமாக, தண்ணீர் மூலமாக, மண் மூலமாக விஷத்தை திட்டமிட்டு பரப்பி கருணையின்றி படுகொலை செய்து  வருவதை ஒரு பொழுதும் அனுமதிக்க முடியாது.

திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் கண்ட தோல்வியை எங்கள் தலையில் போட்டு அடுத்த வென்ளலூர் குப்பை கிடங்காக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

உடனடியாக குப்பைக் கழிவுகளை இங்குள்ள காலாவதியான பாறைக் குழியில் கொட்டுவதை நிறுத்தவும். கொட்டிய குப்பைகளை திரும்ப எடுக்கவும் முதலிபாளையம், நல்லூர் பொது மக்கள் கூட்டியக்கம் சார்பாக அறிவிப்பு செய்கிறோம்.

இந்த நிலை நீடித்தால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை சந்திக்க தயாராக இருங்கள்!

இப்படிக்கு

முதலிபாளையம், நல்லூர் பொது மக்கள் கூட்டியக்கம், அனைத்து இயக்கங்கள். திருப்பூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு.

செய்திகள்: சரவணக்குமார்

By TN NEWS