மதுரை, ஆகஸ்ட் 21:
தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பில் மதுரையில் இன்று நடைபெற்ற மாநில மாநாட்டில் கடும் வெயில் தாக்கத்தால் பங்கேற்ற இளம் தொண்டர் உயிரிழந்த துயரச் சம்பவம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் மகன் ரோசன் (18) தவெக இயக்கத்தில் ஆர்வம்கொண்டு செயல்பட்டவர். மதுரையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்துகொள்ள அவர் வந்திருந்தார்.
மாநாட்டுத் திடலில் வெயிலின் கொடுமையால் ரோசன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு மீளச் செய்து மாநாட்டுத் திடலுக்கே திருப்பி அனுப்பினர். மாநாடு நிறைவடைந்த பின் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த ரோசன், மதுரை–சமயநல்லூர் அருகே மீண்டும் மயக்கநிலைக்கு ஆளானார்.
இதையடுத்து உடனடியாக சமயநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
சோகத்தில் மூழ்கிய தொண்டர்கள்
இளம் வயதிலேயே உயிரிழந்த ரோசனின் மரணம் தவெக தொண்டர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து மாநாட்டுக்கு வந்திருந்த தொண்டர்கள், இந்தச் சம்பவத்தால் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவா?
“வெயில் கடுமையாக இருக்கும் நிலையில் மாநாட்டுத் திடலில் போதிய நிழல், மருத்துவ முகாம், குடிநீர் வசதி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. இதுவே இளம் தொண்டர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது” என சில தொண்டர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
சமூக, அரசியல் எதிரொலி
இந்நிகழ்வு குறித்து பல்வேறு சமூக, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி மற்றும் கண்டனம் எழுந்துள்ளது.
“மாநாடுகள் நடத்துவது முக்கியம் தான்; ஆனால் பங்கேற்பவர்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை. அது புறக்கணிக்கப்பட்டால் இத்தகைய துயரங்கள் தவிர்க்க முடியாது” என்று ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரோசனின் குடும்பத்துக்கு அரசும், தவெக இயக்கமும் உடனடி நிதி உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இளம் தொண்டரின் மரணம் மாநாடு, அரசியல் கூட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது.
செய்திகள்: வசந்த குமார்
மதுரை சிறப்பு செய்தியாளர்.