“அடுத்த கூட்டத்தில் இப்படிச் சம்பவம் நடந்தால், ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்பிவிடுவோம்” – எடப்பாடி பழனிசாமி…?
ஆம்புலன்ஸ் டிரைவர் விளக்கம் வெளியீடு
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசிய உரை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவர் தனது உரையில்,
“அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை. கடந்த பல கூட்டங்களில் கவனித்துப் பார்த்துள்ளேன். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேண்டுமென்றே அந்த இடத்தில் செலுத்தப்படுகின்றன. இது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தின் கேவலமான செயல்.
எத்தனை ஆம்புலன்ஸ் விட்டாலும் அதிமுகவை யாராலும் குலைக்க முடியாது. அரசியல் ரீதியாக எதிர்க்க வேண்டும். கூட்டத்திற்கு இடையே ஆம்புலன்ஸ் வந்து மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட கூட்டங்களில் இதுபோல் நடந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அடுத்த கூட்டத்தில் இப்படிச் சம்பவம் நடந்தால், அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரையே நோயாளியாக்கி, அதே ஆம்புலன்சில் அனுப்பி விடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை நேரடியாக மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
டிரைவர் விளக்கம்
இந்த நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் சென்றிருந்த ஆம்புலன்ஸ் டிரைவரே தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
“நான் நோயாளி ஒருவரை அழைத்து வருவதற்காகவே அவ்வழியாக சென்றேன். 60 வயதான சென்ட்ராயன் என்ற நபரின் உடல்நிலை மோசமடைந்ததால், அவரை அழைக்கப் போனேன்.
பொதுவாக நோயாளி அவசர நிலையில் இருந்தால், விளக்கு (siren) போட்டே செல்வோம். அதுபோலவே சென்றேன். காலை 10 மணியளவில் சென்றபோது, கூட்டம் முடிந்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அங்கு கூட்டம் இன்னும் நடந்து கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் அதே பாதையில் ஆம்புலன்ஸை செலுத்த வேண்டியிருந்தது” என்று விளக்கம் அளித்தார்.
எதிர்வினைகள்
இந்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன.
சிலர், “ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டுவது மக்கள் உயிரை ஆபத்தில் ஆழ்த்தும் செயலாகும்” என்று கண்டனம் தெரிவிக்கின்றனர்.
மற்றொரு பக்கம், “கூட்டங்களுக்கு இடையில் நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவது பாதுகாப்பு பிரச்சினையாகும்” என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
எதுவாக இருந்தாலும், உயிர் காப்பு பணியில் ஈடுபடும் ஆம்புலன்ஸ் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து அரசியல் மற்றும் மருத்துவ துறைகளில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சேக் முகைதீன் – இணை ஆசிரியர்