Wed. Aug 20th, 2025





மாண்புமிகு தமிழக முதல்வர் ஆலோசனை

செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிற்பர் என்பதற்கான ஆலோசனை இன்று நடைபெறுகிறது. அதில், சமீபத்தில் மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்ற மதிமுக தலைவர் வைகோவின் பெயர் முன்னிலையாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட அரசியல் மற்றும் பாராளுமன்ற அனுபவம் கொண்டவர், “பாராளுமன்றப் புலி” எனப் பெயர் பெற்றவர், ஒன்றிய அரசின் நடைமுறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பதால், வைகோ இந்தப் பொறுப்புக்கு மிகவும் பொருத்தமானவர் எனக் கருதப்படுகிறது.

மேலும், ஒரு தமிழரை எதிர்த்து வாக்களிக்கும் நிலை திமுகவுக்கு வரக்கூடாது என்பதற்காகவும், பாஜக வைத்துள்ள அரசியல் சதியை முறியடிக்கும் வகையிலும், வைகோவை களம் இறக்க தமிழக முதல்வர் முடிவு செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

அதோடு, தென்னிந்தியர் – வடஇந்தியர் என்ற பிரிவினை அரசியலை தடுக்கும் விதமாகவும், சந்திரபாபு நாயுடுவின் தெலுகு தேசம், தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் போன்ற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை பெறும் வகையிலும், வைகோவை முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.

சி.பி. ராதாகிருஷ்ணனை விட, வைகோவுக்கு அனைத்துக் கட்சிகளிலும் மிகுந்த மதிப்பு உண்டு என்பதும், இந்தியா கூட்டணி வட்டாரங்களில் வலியுறுத்தப்படுகிறது.

கடந்த வாரம் ராதாகிருஷ்ணன், தமிழக முதல்வரை சந்தித்து ஆதரவு கோரியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே இந்த நகர்வு தொடங்கப்பட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகள், தேசிய அரசியலில் சூடான நிலைமைகள் போன்ற காரணிகளைப் பார்க்கும்போது, வைகோ போட்டியிட்டால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் என்றும், வெற்றிக்கான நம்பிக்கை இந்தியா கூட்டணியில் நிலவுகிறது.

2024 தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்திருந்தால், வைகோ ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இணை ஆசிரியர் – சேக் முகைதீன்.

By TN NEWS