Tue. Jul 22nd, 2025

தெலங்கானா முதல்வர் உத்தரவு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் சந்திராயங்குட்டா பகுதியில் உள்ள ஷாஹி நகரில் வசிப்பவர் அமின் அகமது அன்சாரி.


இவர் 7 அடி உயரமுள்ள இளைஞர். இவரது தந்தை கச்சேகுடா ஆர்.டி.சி டிப்போவில் தலைமை காவலராக பணிபுரிந்த நிலையில், அவர் கடந்த 2021ல் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் இன்டர்மீடியட் 2ம் ஆண்டு (பிளஸ் 2) முடித்த அமின்அகமது அன்சாரிக்கு, ஆர்டிசி நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு கண்டக்டர் பணி வழங்கியது. அதன்படி அரசு பஸ்சில் கண்டக்டராக வேலையில் சேர்ந்தார். அமின் அகமது அன்சாரி பணியில் சேர்ந்த பிறகு புது சிக்கலை எதிர்கொண்டார்.

அவர் 7 அடி உயரம் உள்ள நிலையில் பஸ்சின் உயரம் 6.4 என்பதால் அவரால் நிமிர்ந்து பஸ்சில் பணி செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதனால் தலையை பக்கவாட்டில் சாய்த்துக்கொண்டு சுமார் 10 மணிநேரம் வேலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவருக்கு தினசரி கழுத்து மற்றும் முதுகு வலியும், தூக்கமின்மையும் ஏற்பட தொடங்கியது. இதற்காக அடிக்கடி சிகிச்சை பெற தொடங்கினார். அரசு பணி கிடைத்தும் தன்னால் முழு ஈடுபாடுடன் செய்ய முடியாத நிலையால் அவர் வேதனையடைந்து வந்தார்.

இந்நிலையில் அண்மையில் அமித்அகமது அன்சாரி தலையை பக்கவாட்டில் சாய்ந்த வாறு பணியில் ஈடுபட்டதை அதே பஸ்சில் சென்ற சிலர் புகைப்படம் எடுத்து எக்ஸ் பக்கத்திலும், பிற சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். இந்த காட்சி தெலங்கானாவில் வைரலானது. இதையறிந்த முதல்வர் ரேவந்த்ரெட்டி உடனடியாக போக்குவரத்து அதிகாரிகளை அழைத்து விசாரித்தார். அமின் அகமது அன்சாரிக்கு அதே துறையில் அலுவலக பணி வழங்கும்படி நேற்று உத்தரவிட்டார்.

M.Shaikh Mohideen

By TN NEWS