Tue. Jul 22nd, 2025



சென்னை: தமிழகத்தில் அண்ணாமலையின் பதவி மாற்றம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், பாஜகவில் உள்ளோர் இதை மறுக்கும் வகையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை, தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என மறுமொழி அளித்துள்ளார். அதிமுகவுடன் கூட்டணியில் இணையத் தயார் இல்லை என்பதையும் அவர் தெளிவாகக் குறிப்பிட்டார். இதனால், பாஜக மேலிடம் தமிழகத்தில் நிலைமையை சீராக கண்காணித்து, அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம் என்கிற தகவல்கள் வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

அதிமுகவின் பலவீனம் – அண்ணாமலையின் திட்டம்

அண்ணாமலை தனது அறிக்கையில், தமிழகத்தைப் பல மண்டலங்களாக பிரித்து பார்க்கும் போது, அதிமுகவின் செல்வாக்கு பல இடங்களில் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், சாதிய அடிப்படையில் வாக்கு கணக்கீட்டினை கண்காணிக்கும் பாஜக, அதிமுக பல்வேறு சாதி ஆதரவை இழந்து விட்டதையும் அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே, 2026 தேர்தலுக்குப் பிறகு ஒரு திராவிடக் கட்சி தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக கரைந்துவிடும் என அண்ணாமலை கணிக்கின்றார். இது அதிமுகவுக்கா? அல்லது திமுகவுக்கா? என்பதில் தெளிவில்லை. ஆனால், 2026 சட்டமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும் சவாலாக இருக்கும் என்பது உறுதி.

அதிமுகவுக்கு உயிர்கொடுக்க பாஜகவா?

2026 தேர்தலில் அதிமுக தோற்றால், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, கோஷ்டிபோசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதேவேளை, விஜய் தனது புதிய அரசியல் கட்சியுடன் களமிறங்குவது அதிமுகவின் வாக்குவங்கியை மேலும் பாதிக்கக்கூடும். இந்நிலையில், பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் சேர்வது, அந்தக் கட்சிக்கு உயிர்கொடுக்க முயற்சி செய்வதற்குச் சமம் என பலரும் கருதுகின்றனர்.

அண்ணாமலையின் நோக்கம்

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக புதிய அரசியல் உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில், 2026 தேர்தலில் அதிமுகவை தனித்து விடுவதே சிறந்த வழி என அண்ணாமலை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது, பாஜக அரசியல் வளர்ச்சிக்குத் தேவையான முதன்மை நிலை அமைக்கும் என அவர் கருதுகிறார்.

கூட்டணி அரசியலா? தனிப்பெருங்கட்சி அரசியலா?

அண்ணாமலை தொடர்ந்து கூட்டணி ஆட்சியின் முக்கியத்துவத்தைக் கூறி வருகின்றார். அதிமுகவுடன் இணைந்து 2026 தேர்தலில் வென்றாலும், அதன்பிறகு அதிமுகவின் ஆதிக்கமே மேலோங்கி விடும். இதனால், பாஜக தனித்து வளர முடியாது என்பதே அவரது பார்வை.

இந்த முடிவுகள் பாஜக தலைமையிடத்திற்கு தெரியாமல் இல்லை. அதிமுகவுக்காக அண்ணாமலையை பாஜக மேலிடம் மாற்றிவிடும் என சிலர் ஊகித்தாலும், அதற்கான சாத்தியம் குறைவுதான்.

அதிமுக – பாஜக கூட்டணியை ஒப்புக்கொள்வது என்ற முடிவை தலைமையிடம் எடுக்கும் போது, அண்ணாமலையின் நிலைப்பாட்டை புறக்கணிக்க வாய்ப்பு இல்லை. தற்போது நிலவி வரும் சூழ்நிலையை தொடர்ந்து, பாஜக என்ன முடிவு எடுக்கிறது என்பது வருங்கால அரசியலில் முக்கிய அம்சமாக இருக்கும்.

மு.சேக் முகைதீன்

By TN NEWS