Tue. Jun 2nd, 2026

பூட்டை உடைத்து கம்ப்யூட்டர்கள், மின்விசிறி, நீர்மூழ்கி மோட்டார் கொள்ளை.

செங்கம், ஜூன் 1:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்வணக்கம்பாடி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர் உபகரணங்கள் மற்றும் பிற பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் பூட்டை உடைத்து கைவரிசை:

மேல்வணக்கம்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக முந்தைய அரசின் காலத்தில் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர் உபகரணங்கள் பள்ளியில் இருந்தன.

கோடை விடுமுறை காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் பள்ளியின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து 10 எல்.சி.டி. மானிட்டர்கள், 10 சி.பி.யூக்கள், 2 டேபிள் பேன்கள் மற்றும் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

தூய்மைப் பணியின் போது அதிர்ச்சி:

வரும் நாட்களில் பள்ளி திறக்கப்பட உள்ளதால், பள்ளியை சுத்தம் செய்ய ஆசிரியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை வந்தபோது, பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை:

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். திருட்டு தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மர்ம நபர்களை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இரவுநேர ரோந்து அதிகரிக்க கோரிக்கை:

கிராமப்புற பள்ளிகளை குறிவைத்து நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். எனவே, இரவுநேர காவல் ரோந்துப் பணியை அதிகரிக்கவும், அரசு பள்ளிகளுக்கு இரவு காவலர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டம்-ஒழுங்கை வலுப்படுத்த வேண்டும்:

செங்கம் பகுதியில் திருட்டு, கஞ்சா விற்பனை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஏழுமலை – திருவண்ணாமலை மாவட்டம்.

By TN NEWS