Sun. May 31st, 2026

மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு:

சென்னை, மே 30:

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம். லியாகத் அலி என்பவர், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். அதில், தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டண விவரங்களை வழங்குமாறு கோரியிருந்தார்.

இந்த மனு முதலில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் உரிய காலக்கெடுவிற்குள் மனுதாரருக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில தகவல் ஆணையத்தில் எம். லியாகத் அலி மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர். இளம்பரிதி, தனது உத்தரவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுதாரர் கோரிய தகவல்களை மூன்றரை ஆண்டுகளாக வழங்காமல் அதிகாரிகள் காலதாமதப்படுத்தியுள்ளதாகவும், இறுதியில் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்ற பதிலை மட்டுமே வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலை கருத்தில் கொண்டு, தற்போது பணியில் உள்ள பொதுத் தகவல் அலுவலரும் கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரியுமான சம்பந்தப்பட்ட அதிகாரி, மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த மனுவை தேவையின்றி பல்வேறு அலுவலகங்களுக்கு மாற்றி அனுப்பியதற்கான விளக்கத்தை அளிக்கவும், ஏன் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கக்கூடாது என்பதற்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரிகள் ஜூன் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கட்டண விவரங்கள் கட்டாயம் வெளியிட வேண்டும்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் கல்விக்காக பொருளாதார வரம்புகளை மீறியும் பெரும் தொகைகளை செலவழித்து வருகின்றனர். எனவே அவர்கள் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வெளிப்படையான கணக்கு மற்றும் கட்டண விவரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தகவல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ். சுகன்யா, பொதுத் தகவல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்:

– வகுப்பு வாரியான கல்விக் கட்டண விவரங்கள் பள்ளி நுழைவாயிலில் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட வேண்டும்.
– பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் கட்டண விவரங்கள் தெளிவாக பதிவேற்றப்பட வேண்டும்.
– மாணவர் சேர்க்கைக்காக வழங்கப்படும் விண்ணப்பப் படிவங்களிலேயே கல்விக் கட்டண விவரங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
– பெற்றோர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் கட்டண விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும்.

என்ற உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த உத்தரவுகள் நடைமுறையில் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, அதற்கான அறிக்கையை ஜூன் 15 ஆம் தேதி மாநில தகவல் ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு நிம்மதி அளிக்கும் நடவடிக்கை.

கல்விக் கட்டண விவரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்ற மாநில தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு, பெற்றோர்களின் நீண்டகால கோரிக்கைக்கு கிடைத்த முக்கியமான பதிலாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கல்விக் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதுடன், பள்ளி நிர்வாகங்களின் பொறுப்புணர்வும் மேம்படும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஷேக் முகைதீன்
இணை ஆசிரியர்.

By TN NEWS