Fri. May 29th, 2026

குடியாத்தம், மே 28, 2026

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் “வெற்றி நகர்” என்ற பெயரில் வீட்டு மனைப் பிரிவு போடப்பட்டுள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி, ஊராட்சி நிர்வாகத்தின் ஒப்புதல் சான்றுடன் சுமார் 144-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

நிலுவையில் உள்ள வசதிகள்:

பொதுமக்கள் கூற்றுப்படி, மனைப் பிரிவுகள் போடும்போது தார் சாலை, கழிவுநீர் கால்வாய், மின் கம்பங்கள், குடிநீர் தொட்டி, விளையாட்டு மைதானம், சமுதாயக் கூடம் ஆகியவற்றுக்கான இடங்களை ஒதுக்க வேண்டும். ஆனால் தற்போதைய பிரிவில் இந்த வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை.

பெயர் மாற்றமும் விலை உயர்வும்:

மேலும், முன்னர் “நாராயணி கிரி நகர்” என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதியில், 400 சதுர அடி இருந்த நிலப்பரப்பு தற்போது பெயர் மாற்றப்பட்டு “வெற்றி நகர்” என விளம்பரப்படுத்தப்படுகிறது. விலையும் சதுர அடிக்கு 800 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 90-க்கும் மேற்பட்ட வீட்டுமனைகள் விற்கப்பட்டுள்ளன.

ஊராட்சி நிர்வாகத்தின் பங்கு:

வீட்டுமனைப் பிரிவுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளதா என்பதை ஊராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து ஒப்புதல் சான்று வழங்க வேண்டும். ஆனால், இங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலேயே சான்றுகள் வழங்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பொதுமக்களின் எதிர்பார்ப்பு:

இதனால் வீட்டுமனைகள் வாங்கும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே, அடிப்படை வசதிகள் இல்லாமல் மனைப் பிரிவுகள் போடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா

By TN NEWS