Thu. May 14th, 2026

மே 13 – குடியாத்தம்

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பேருந்து இன்று மதியம் வழக்கம்போல் குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தது. வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ள அருள்மிகு கங்கை அம்மன் சிரசு திருவிழாவை முன்னிட்டு குடியாத்தம் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் நிலவி வருகிறது.

இந்த நிலையில், அரசு பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோது, பேருந்து முழுமையாக நிற்பதற்கு முன்பே சில பயணிகள் இறங்கியதாகவும், மேலும் சிலர் இருக்கை பிடிப்பதற்காக அவசரமாக பேருந்தில் ஏற முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், முதியவர் ஒருவர் பேருந்தின் முன்பகுதியில் நின்றிருந்ததாக தெரிகிறது.

பேருந்து வருவதை கவனிக்காமல் நின்றிருந்த அந்த முதியவரை கவனிக்காத ஓட்டுநர் ரவி, பேருந்தை இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முதியவர் பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்தவர் குடியாத்தம் அடுத்த வீ மோட்டார் பகுதியை சேர்ந்த சண்முகம் (70) என்பது தெரியவந்தது.

சம்பவத்தையடுத்து உயிரிழந்த முதியவரின் உறவினர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனை மற்றும் காவல் நிலைய வளாகத்தில் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS