Wed. May 13th, 2026

திண்டுக்கல், மே 13: கொடைரோடு அருகே சுடுகாடு வசதி இல்லாததால், உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

📍 எங்கு நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு காமலாபுரம் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்கள் இறந்த உறவினர்களை அப்பகுதியில் உள்ள நீர்நிலை ஓடையில் அடக்கம் செய்து வந்துள்ளனர்.

🚧 பிரச்சனை என்ன?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, செம்பட்டியில் இருந்து காமலாபுரம் பிரிவு வரையிலான சாலை அகலப்படுத்தும் பணியின் போது, பழைய சுடுகாட்டுப் பகுதியும் அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இப்பகுதி மக்கள் தங்கள் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு இடமின்றி பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

💔 என்ன நடந்தது?

இன்று, அப்பகுதியைச் சேர்ந்த முருகன் (70) என்ற கூலித் தொழிலாளி உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்வதற்கு தனி இடம் (சுடுகாடு) கோரி, அப்பகுதி மக்கள் முருகனின் உடலை செம்பட்டி – கொடைரோடு சாலையில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

🤝 தீர்வு…?

வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாடு வசதி குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மக்கள் மறியலை கைவிட்டு உடலை எடுத்துச் சென்றனர். இருப்பினும், நீண்டகாலத் தீர்வு கிடைக்காத வரை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ராமர்

By TN NEWS