10.05.2026 – சென்னை, மயிலாப்பூர்.
சென்னையின் மயிலாப்பூரில் உள்ள ரசிகா ரஞ்சனி சபா கலைக்கூடத்தில், சிவசக்தி கலா நாட்டியாலயா சார்பில் “சலங்கை பூஜை” நிகழ்ச்சி மே 10 அன்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கலை ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
சிவசக்தி கலா நாட்டியாலயா மாணவிகள் முதல் முறையாக மேடையேறி தங்களது நாட்டியத் திறமைகளை அழகாக வெளிப்படுத்தினர். பாரம்பரிய நாட்டிய வடிவங்களில் அமைந்த நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. ஒவ்வொரு மாணவியும் தங்களது அர்ப்பணிப்பும் பயிற்சியும் வெளிப்படும் வகையில் சிறப்பாக நடனமாடினர்.
குறிப்பாக, சிவபெருமானின் எட்டு திருத்தலங்களை மையமாகக் கொண்டு மாணவிகள் வழங்கிய நடன வடிவமைப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இசை, அசைவுகள் மற்றும் அபிநயங்களின் மூலம் சிவபெருமானின் மகிமையை கண்முன்னே நிறுத்திய மாணவிகளின் கலைநிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
நிகழ்ச்சியில் ஏராளமான கலை ரசிகர்கள் கலந்து கொண்டு மாணவிகளின் திறமைகளை பாராட்டினர். அரங்கமே கைதட்டலால் முழங்கிய நிலையில், மாணவிகளின் அர்ப்பணிப்பும் கலைநயமும் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், “சிவசக்தி கலா நாட்டியாலயா நடத்தும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். எம்.ஆர். ராதாவின் பேத்தியும், வாசுவின் மகளும் பாரம்பரிய கலையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சிவபெருமானின் எட்டு ஸ்தலங்களை மாணவிகள் நாட்டியத்தின் மூலம் உயிர்ப்புடன் எடுத்துரைத்தனர். அனைத்து மாணவிகளின் எதிர்காலமும் சிறப்பாக அமைய வேண்டும். இவர்களின் கலைப்பயணம் கின்னஸ் சாதனை அளவுக்கு உயர வேண்டும். இந்த கலை நிகழ்ச்சி வருடா வருடம் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மேலும், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திய கலை ஆசிரியர் மது அவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
தமிழ்நாடு டுடே – சென்னை செய்திகளுக்காக
எம். யாசர் அலி அன்வர் பாஷா
ஒளிப்பதிவாளர் : கே. ராஜேஷ்

