இராமகிருஷ்ணன் என்னும்
அதிரடி சரவெடி.
அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் வழிப் பொருளியல் முதலாமாண்டு. எங்கள் வகுப்பில் இரண்டு இராமகிருஷ்ணன்கள். ஒரு இராம்கி அமைதியோ அமைதி. அமைதி என்றால் பூரண அமைதி. அஞ்சு இஞ்ச் தள்ளி நின்னாக்கூட அவர் பேசுறது நமக்கு கேக்காது. இன்னொரு இராமகி அப்படியே நேரெதிர். அதிரடி சரவெடி. ஒன்று பேசிக் கொண்டிருப்பான். இல்லையெனில் ஆடிக் கொண்டிருப்பான். ஆட்டம் எனில் ஹாக்கி. University Player. நாங்கள் ஒன்றிரண்டு நோட்டுகளோடும், ஜோல்னாப் பைகளோடும் அலைந்தால் அவன் ஹாக்கி மட்டையோடு திரிவான். காலை வகுப்புக்கு தாமதமாக வருவான். OD என்பான். வகுப்பில் இருக்கும் நேரங்களில் பேராசிரியர்கள் சொல்வதைக் கவனமாகக் கவனிப்பான். சில நேரங்களில் தூங்குவான். விளையாண்டுட்டு வந்துருக்காப்டி விடுங்கப்பா என்று பேராசிரியர்களே சொல்லிவிடுவதால் மெலிதாய் குறட்டை வேறு விட்டுக்கொண்டு தூங்குவான். நாங்கள் வகுப்பையும் கவனித்துக்கொண்டு குறிப்புகளையும் எடுத்துக் கொண்டிருப்போம். வகுப்பு முடிந்ததும் லைப்ரரிக்கு ஓடுவோம். மேலதிக விபரங்களுக்காக புத்தகங்களைத் தேடிக்கொண்டிருப்போம். இந்த ஹாக்கி ராம்கி லைப்ரரிக்கு வருவதுமில்லை… Extra Point களுக்காக மெனக்கெடுவதுமில்லை.
தேர்வு நேரங்களில் அரக்கப் பரக்க ஓடிவருவான். 11 மணிக்கு தேர்வெனில் பத்து மணிக்கு வருவான். நான், சங்கரன், அமைதி இராம்கி, காந்தி எல்லோரும் எட்டு மணிக்கெல்லாம் வந்து மாங்கு மாங்கென்று படித்துக் கொண்டிருப்போம்.
ஹாக்கி மட்டையைச் சுழற்றிக் கொண்டே வரும் ராம்கி… இந்தப் பாடத்த சொல்லிக் குடுங்க என்று ஒரு நாளும் கேட்டதில்லை… இன்னிக்கு என்ன பாடத்துல டெஸ்ட் என்பான். படபடவென்றும் பற்றிக்கொண்டும் வரும். மற்றவர்கள் எல்லாம் சீரியஸாகப் படித்துக் கொண்டிருக்க… என்னிடம் வருவான்… சுரேசு… நீ சொல்லப்பா என்பான். நான் Micro Economics என்பேன். Micro Economics ன்னா நுண்ணினப் பொருளியலா, பேரினப் பொருளியலா என்பான். கோபம் நெஞ்சிலிருந்து கண்ணுக்கு ஏறி கபாலத்துக்குள் இறங்கி மூளையெல்லாம் சிவக்கும். ஹாக்கி மட்டையால் தாவாங்கட்டையைச் சொறிந்து கொண்டே சொல்லுங்க சுரேஷ் என்பான். சும்மா அப்டியே கதை மாதிரி சொல்லுங்க… நான் மனசுல எழுதிக்கிறேன் என்பான்.
அக்கேசியா மரத்தின் அடியில் மஞ்சள் பூக்கள் சிதறிக் கிடக்க நான் பூக்களின் மீதும் இராம்கி படிகளின் பக்கவாட்டுச் சுவரில் அமர்ந்தும் கதா காலாட்சேபம் தொடங்கும். பார்ப்பவர்களுக்கு ராம்கியிடம் நான் பாடம் படிப்பதாகத் தோன்றும். நான் சொல்லத் தொடங்கியதும் மெல்ல மெல்ல சாயத் தொடங்குவான். படிகளில் சாய்ந்து கொண்டு ஹாக்கி மட்டையை தலைக்கு அண்டக் கொடுத்துக் கொள்வான். கண்களை மூடிக் கொள்வான். தூங்குகிறானோ என்ற வயிற்றெரிச்சலில் செருமினால் கேக்குறேன் கேக்குறேன் என்பான். ஒரு சந்தேகமும் கேட்க மாட்டான். Diagram யையும் அவனுக்கு சொல்ல வேண்டும். போட்டுக் காமிக்கிறேன் பாத்துக்கப்பா என்றால் வேணாம் வேணாம் என்பான். இருக்கின்ற தம்மாத்துண்டு மூளையைக் கொண்டு diagram ன் வளைவுகளை, நெளிவுகளைச் சொல்லவேண்டும். சொல்வேன். கேட்டுக்கொள்வான். அவ்வப்போது இலேசாகச் சிரித்துக்கொள்வான். பாதிப்பாடம் வரும்போது போதும் என்பான். இன்னும் இருக்குப்பா என்றால் எனக்குப் போதும்ப்பா… போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று பழமொழி வேறு.
ஒன்றரை மணி நேரத்தில் எழுத வேண்டிய அன்றைய Micro Economics தேர்வை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே முடித்து விட்டுப் போய்விட்டான். நாங்கள் நேரம் பத்தலையே என்று ஒன்றரை மணிக்குப் பிறகும் புலம்பிக் கொண்டு வெளியே வந்தோம். மறுநாளே திருத்தப்பட்ட விடைத்தாள்களோடு வகுப்புக்கு வந்தார் எங்கள் பேராசிரியர் JJS என்றழைக்கப்படும் ஜான்சன் சுந்தர்ராஜ் சார். வகுப்புக்குள் நுழையும் போதே என்னை முறைத்துக் கொண்டே வந்தார். விடைத்தாள்களை விநியோகித்தார். முப்பதுக்கு நான் எடுத்திருந்தது 20. நீ எத்தனை மார்க்குப்பா என்றேன், ராம்கியிடம். ஹாக்கி மட்டையை தாவாங்கட்டைக்கு தாங்கக் கொடுத்துவிட்டு ராம்கி சொன்னது… என்னங்க சுரேஷ்… எனக்கு 27 தான் போட்ருக்காப்ல…
ஹாக்கி சர்டிபிகேட்ல ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல SI ஆ செலக்ட் ஆகி, இன்ஸ்பெக்டர் ஆகி தற்போது இராமநாதபுரம் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர்.
திடீர்ன்னு போன் போடுவான்… நாளைக்கு ஒரு பள்ளிக்கூடத்துல பேசப்போறேன்… நாலு இங்கிலீஷ் வார்த்தை சொல்லு ம்பான். சொல்வேன். பேசிப்புட்டேன்ல என்று வீடியோ அனுப்புவான். தமிழ்ல பேசுறதுக்குத்தான் நிறைய யோசிக்க வேண்டியிருக்கு… இங்கிலிபீசுக்கு ஒரு ஓசனையும் வேண்டியதில்ல ம்பான். நட்பு வட்டக் கூடுகைகளை முன்னெடுத்துச் செய்வான். நம்மளோட படிச்ச எல்லாரையும் கூப்பிட்டு கொடைக்கானல்ல ஒரு விருந்து வச்சு கொண்டிப்புடனும் பங்கு என்பான். என்னைப் போலவே இருதய சிகிச்சை செய்துகொண்டவன். அதெல்லாம் ஒண்ணும் பயப்படாத பங்கு…. என்று எனக்கு ஆறுதல் சொன்னவன்.
தேர்தல் பணிக்காக ஒட்டன்சத்திரம் வந்திருந்தவன் நேற்று மாலை மாரடைப்பால் காலமானான்.
அவன் பெற்ற பெண் குழந்தைகள் அங்கிள் அப்பாவ எந்திரிச்சு நடந்து வரச் சொல்லுங்க அங்கிள் என்று கதறுகிறார்கள். எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் நாங்கள்.
போயிட்டு வா பங்கு…
சுரேஷ் காத்தான் 
ஒரு நண்பனின் உண்மையான நட்பு மற்றும் இரங்கல். தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம் மற்றும் அனைத்து நிருபர்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
மறுபதிப்பு: ஷேக் முகைதீன்.

