Sun. Apr 19th, 2026

தென்காசி, ஏப்ரல் 18:
தென்காசி மாவட்டம் முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் 10,000-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

AICCTU தென்காசி மாவட்ட ஜனநாயக தூய்மை பணியாளர்கள் காவலர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர், தேர்தல் அலுவலர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

மனுவில் குறிப்பிடப்பட்டதாவது:
தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் மற்றும் 221 கிராம ஊராட்சிகளில், தினசரி தூய்மைப் பணிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 12,64,411 வாக்காளர்கள் உள்ளனர்.

கடந்த தேர்தல்களில், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படவில்லை என்றும், மாநில தேர்தல் ஆணையர் மற்றும் தொழிலாளர் நலத்துறை வழங்கியுள்ள உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்றும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து, ஏப்ரல் 23 அன்று நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பு இலக்கை முன்னிட்டு, அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்களுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இதுகுறித்து தெளிவான அறிவுறுத்தல் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோளை, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். வேல்முருகன் மற்றும் மாவட்ட பொதுச்செயலாளர் ஜே. சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர்
அமல்ராஜ்

By TN NEWS