Fri. Apr 10th, 2026

நாமக்கல், ஏப். 9:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தேர்தல் பறக்கும் படை பணிக்குச் சென்ற தலைமை காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பரமத்திவேலூரை அடுத்த நல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவர் பிரவீன் (35). ஜேடர்பாளையம் அருகிலுள்ள கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த இவருக்கு சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நடைபெற்று வரும் தேர்தல் பணிகளின் ஒரு பகுதியாக, பிரவீன் தேர்தல் பறக்கும் படையில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று (ஏப். 9) பகல் சுமார் 2 மணியளவில் பணிமாற்றத்திற்காக ஜேடர்பாளையத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பரமத்தி நோக்கி பயணம் மேற்கொண்டார்.

அப்போது பரமத்தி காவல் நிலையத்திற்கு அருகில் (சுமார் 500 மீட்டர் முன்பு), கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவருக்கு தலையில் கடுமையான காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு பரமத்தியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்ட செய்தியாளர்: B. ரஞ்சித்குமார், நாமக்கல்


By TN NEWS