தர்மபுரி, ஏப். 8:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன் (M.Sc., Ph.D.) அவர்கள் இன்று கடத்தூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சில்லாரஅள்ளி ஊராட்சியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கடத்தூர் நத்தமேடு, மொட்டாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டினார். சில்லாரஅள்ளி கிராமத்திற்கு வந்த அவருக்கு பொதுமக்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதும் நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தது.
பிரச்சாரத்தின் போது பொதுமக்களிடம் பேசிய அவர், “இந்தப் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான குடிநீர் வசதி, சாலை மேம்பாடு, விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசன திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தையும் நான் வெற்றி பெற்றவுடன் முன்னுரிமை அளித்து நிறைவேற்றுவேன்” என்று உறுதியளித்தார்.
மேலும், கழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை எடுத்துரைத்து, தொகுதியின் முழுமையான வளர்ச்சிக்காக “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த தேர்தல் பரப்புரையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக் கட்சி நிர்வாகிகள், கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர்கள், உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆதரவும் உற்சாக வரவேற்பும், அந்தப் பகுதியில் வேட்பாளருக்கு அதிக ஆதரவு நிலவி வருவதை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மண்டல செய்தியாளர்
ராஜீவ் காந்தி

