Thu. Mar 19th, 2026

துறையூர், மார்ச் 16:
திருச்சி மாவட்டம் துறையூரில் சமையல் எரிவாயு (கேஸ் சிலிண்டர்) தட்டுப்பாட்டை கண்டித்தும், அதைச் சீர்செய்யத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கேஸ் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி.

தற்போது நிலவி வரும் வளைகுடா போர்ச் சூழ்நிலை காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் தாக்கமாக துறையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமையல் கேஸ் சிலிண்டர் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அன்றாட உணவு சமைப்பதற்கே பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

திமுக தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்த சூழ்நிலையில் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்தத் தவறியதாகவும், விலையேற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காததாகவும் ஒன்றிய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ஸ்டாலின்குமார் தலைமை தாங்கினார்.

பலர் பங்கேற்பு.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சரவணன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, நகர்மன்ற தலைவர் செல்வராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கஸ்டம்ஸ் மாகலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முழக்கங்கள் எழுப்பிய தொண்டர்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, “பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை உடனடியாக போக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்து முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், வளைகுடா போர்ச் சூழலை காரணமாகக் காட்டி தட்டுப்பாட்டை தீர்க்காமல் மெத்தனம் காட்டும் ஒன்றிய அரசின் போக்கை உடனடியாக மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

ஆர். மணி,
திருச்சி மாவட்ட தலைமை நிருபர்

By TN NEWS