Sun. Jan 11th, 2026

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கல்லூரணி பகுதியில் நடைபெற்ற நிலப் பிரச்சனை தொடர்பான வழக்கில், மனித உரிமைகள் மீறல் நடைபெற்றுள்ளதாகக் கண்டறிந்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் திரு. கண்ணதாசன், பாதிக்கப்பட்ட விவசாயி மற்றும் அவரது உறவினருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அந்த இழப்பீடு தொகையான ரூபாய் ஒரு லட்சத்தை, சம்பவ காலத்தில் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்ஐ கோவிந்தராஜ் இடமிருந்து வசூலிக்கவும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரம் :

தென்காசி மாவட்டம் கல்லூரணி அருகே மலையராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது …), விவசாயி. இவர் கடந்த 2023ஆம் ஆண்டு குத்தகை நிலத்தில் மல்லிகை பயிரிட்டிருந்தார். அந்த நிலம் தொடர்பான பிரச்சனையால், முருகேசன் பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கோவில் வரி தொடர்பான பிரச்சனையில், முருகேசன் மற்றும் அவரது சகோதரர் மகனும் அதே ஊரைச் சேர்ந்தவருமான தங்கச்செல்வம், எதிர்தரப்பினரால் தாக்கப்பட்டனர். இதில் காயமடைந்த இருவரும் புகார் அளித்த போதிலும், காவல் நிலையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆனால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர், எதிர்தரப்பினர் அளித்த புகாரின் பேரில், முருகேசன் மற்றும் தங்கச்செல்வம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மனித உரிமைகள் ஆணைய விசாரணை :

இந்த சம்பவம் தொடர்பாக முருகேசன் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து, மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் திரு. கண்ணதாசன், இருதரப்பினரிடமும் விரிவான விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையின் முடிவில், பாதிக்கப்பட்டவர்கள் மீது மனித உரிமைகள் மீறல் நடைபெற்றுள்ளது என உறுதி செய்யப்பட்டதால்,

முருகேசன் மற்றும் தங்கச்செல்வம் இருவருக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும்,

அந்த தொகையை அப்போதைய பாவூர்சத்திரம் காவல் நிலைய எஸ்ஐ கோவிந்தராஜ் இடமிருந்து வசூலிக்கவும்,

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு, விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்கும் முக்கிய தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

ஜே. அமல்ராஜ்
மாவட்ட தலைமை செய்தியாளர், தென்காசி

By TN NEWS