தலைநகர் டெல்லியில் உள்ள Cathedral Church of the Redemption தேவாலயத்தில் டிசம்பர் 25 அன்று நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பங்கேற்றிருந்தாலும், அதே நேரத்தில் நாடு முழுவதும் பல மாநிலங்களில் கிறிஸ்தவ சமூகத்துக்கு எதிரான துன்புறுத்தல்கள், மிரட்டல்கள், வழிபாடு மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்த முரண்பாடு, ஆட்சியாளர்களின் செயல்களை வெறும் அடையாளச் சின்னங்களாக மட்டுமே மாற்றி விடுகிறது. மறுபுறம், கிறிஸ்தவ சமூகம் இன்று பாதுகாப்பின்மை மற்றும் அச்சம் நிறைந்த சூழலில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி, ஹரித்வார் முதல் மத்தியப் பிரதேசம், ஒடிசா, கேரளா வரை — கிறிஸ்துமஸ் பண்டிகையை அமைதியாகக் கொண்டாட முயன்ற குடும்பங்கள், சங்பரிவார் சார்ந்த குழுக்களின் மிரட்டல், அழுத்தம் மற்றும் கொண்டாட்டத் தடைகளை எதிர்கொண்டுள்ளன. இது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை ஆன மத சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்திற்கும் நேரடியான சவாலாகும்.
அரசு உண்மையாகவே ஒவ்வொரு குடிமகனும் தங்கள் மதத்தை அச்சமின்றி பின்பற்றும் உரிமையை உறுதி செய்யத் தயாரா?
அல்லது இதுபோன்ற நிகழ்வுகளை வெறும் பாசாங்கு அரசியல் நாடகங்களாக மட்டுமே பயன்படுத்தப் போகிறதா?
என்ற நியாயமான கேள்வி இன்று எழுகிறது.
எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது. மத வெறுப்பை தூண்டும் சக்திகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மை, மதச்சார்பற்ற தன்மை மற்றும் சகோதரத்துவம் உண்மையான பொருளில் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்தியாவில் சிறுபான்மை சமூகங்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்க அரசும், சட்ட அமலாக்க அமைப்புகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என எஸ்டிபிஐ (SDPI) கட்சி வலியுறுத்துகிறது.
முகமது இலியாஸ் தும்பே
தேசிய பொதுச் செயலாளர், SDPI
