Thu. Feb 5th, 2026

 

பொதுமக்கள் கடும் புகார்!

காணை, டிச.13

விழுப்புரம் மாவட்டம், காணை ஒன்றியம், காணை கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவரும், செவிலியர்களும் பணியில் இல்லாததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த சுகாதார நிலையத்தில் பிரசவ சேவைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவசர காலங்களில், குறிப்பாக இரவு நேரங்களில், மருத்துவர் கிடைக்காத சூழ்நிலை தொடர்ந்து நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விஷ பூச்சிகள் கடித்தல் உள்ளிட்ட அவசர சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு சென்றால், அங்குள்ள பணியாளர்கள் மரியாதையின்றி பேசுவதாகவும், செவிலியர்களும் மருத்துவரும் நோயாளிகளை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், பிரசவ சேவைக்கு அவசியமான செவிலியர்கள் மருத்துவமனையில் முறையாக பணியில் இருப்பதில்லை என்றும், மருத்துவர் மருத்துவமனை வளாகத்திலோ அருகிலோ தங்குவதில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு குறிப்பிட்ட அடையாள உடை (யூனிஃபாரம்) கட்டாயமாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் செவிலியர்கள் சாதாரண கலர் உடைகளில் இருப்பதால், யார் செவிலியர் என்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படும் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, காணை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்யவும், பணியாளர்களின் ஒழுங்கீன மற்றும் அலட்சிய செயல்பாடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத் துறை உடனடியாக தலையிட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

By TN NEWS