டிசம்பர் 1 – வேலூர் மாவட்டம், குடியாத்தம்.
குடியாத்தம் அருகே பரதராமி – டிபி பாளையம் – கந்தன் செருவு பகுதிக்கு அருகிலுள்ள தமிழக–ஆந்திர எல்லை ஏரியில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை, ஏரியில் இருந்த ஆழமான சேற்றில் சிக்கி பல மணி நேரம் தத்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் நிலைமைக்கு அதிர்ச்சி அடைந்து உடனடியாக ஆந்திர மாநில வனத்துறையினர் மற்றும் குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் ஆந்திர வனத்துறை, காவல்துறை மற்றும் குடியாத்தம் வனத்துறையினர் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
யானை சிக்கியிருந்த சேற்றைப் பிளக்க இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பல மணி நேர போராட்டத்திலும் யானை சேற்றிலிருந்து நகர முடியாத சூழலில், ஆந்திராவில் இருந்து இரண்டு கும்கி யானைகள் அழைக்கப்பட்டன.
சுமார் 6 மணி நேர கடினமான முயற்சிக்குப் பிறகு, கும்கி யானைகளின் உதவியுடன் சேற்றில் சிக்கி காயமடைந்திருந்த யானை பாதுகாப்பாக மீட்கப்பட்டது.
பின்னர், மீட்கப்பட்ட யானையை சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம், பலமனேரி யானை சரணாலயத்திற்கு கொண்டு செல்லும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தமிழக–ஆந்திர எல்லைப் பகுதிகளில் தனியாக சுற்றித்திரிந்த இந்த ஒற்றை யானை காயப்பட்ட நிலையில் சேற்றில் சிக்கிய சம்பவம், இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்
