Fri. Dec 19th, 2025




வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல், ஒருவர் கைது.

வேலூர் மாவட்டம் – குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி வனப்பகுதி ஒட்டிய விவசாய நிலத்தில் வனவிலங்கு வேட்டை கும்பல் செயல்படுவதாக வந்த ரகசிய தகவல் உண்மை என நிரூபணம்!

நவம்பர் 26. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உப்பரப்பள்ளி கிராமம் வனப்பகுதி அருகே உள்ள விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாடப் பயன்படுத்தப்பட்ட இரண்டு நாட்டு துப்பாக்கிகள் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பவத்தில் காவலாளி கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாய நிலம் – வனப்பகுதி அருகாமை:

வீட்டைவிட்டு வேறு ஊரில் வசிக்கும் நில உரிமையாளர்
உப்பரப்பள்ளி வனத்தை ஒட்டிய பகுதியில் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செம்மரம், சந்தனம், தேவதார், தேக்குமரம், தென்னை உள்ளிட்ட மரங்கள் நட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கோவிந்தசாமி குடும்பத்துடன் தற்போது ஓசூரில் வசிப்பதால், அவரின் நிலத்தை காவலாளி கோபி என்பவர் மற்றும் குடும்பத்தினர் பராமரித்து வருகிறார்கள்.

கோபியின் ரகசிய வேட்டை!

ரகசிய தகவல் வனத்துறையை அதிர வைத்தது…
கோபி, வனப்பகுதியில் அடிக்கடி வனவிலங்குகளை வேட்டையாடி வருவதாகவும், நாட்டு துப்பாக்கிகள் பதுக்கி வைத்திருப்பதாகவும் ரகசிய தகவல் தமிழ்நாடு வன மற்றும் வன உயிரின குற்றக்கட்டுப்பாட்டு பிரிவுக்கு கிடைத்தது.

இதையடுத்து வேலூர் வனத்துறை மற்றும் குடியாத்தம் வனத்துறை இணைந்து மேற்கொண்ட திடீர் சோதனையில் பெரிய அதிர்ச்சி வெளிச்சத்துக்கு வந்தது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை:

இரண்டு நாட்டு துப்பாக்கிகள் (குண்டுடன் லோடு செய்யப்பட்ட நிலையில்), துப்பாக்கி மருந்து, மயில் இறகு, முயல் வேட்டை வலை, டார்ச் லைட், வேட்டை உபகரணங்கள்.

குண்டுகள் காட்டில் வெடிப்புடன் செயலிழக்கச் செய்யப்பட்டன:
பறிமுதல் செய்யப்பட்ட குண்டுகளை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதியில் வெடித்து செயலிழக்கச் செய்தனர். பின்னர் இரண்டு துப்பாக்கிகளும் குடியாத்தம் கிராமிய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

விசாரணை தொடர்ந்து வருகிறது. இச்சம்பவம் வனப்பகுதியில் வனவிலங்கு வேட்டை மீண்டும் தலைதூக்கி இருப்பதை காட்டுவதாக உள்ளூர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


K.V. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS