Wed. Nov 19th, 2025

சேலம், நவம்பர் 7:
சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில், சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திட்டத்துக்கு எதிராக, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் “சாயப்பட்டறை கழிவுகள் வேண்டாம்” எனக் கோஷமிட்டு இன்று பெருமளவில் ஒன்று திரண்டனர்.



அவர்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு மனு ஒன்றை அளித்து, சாயப்பட்டறை அமைப்பை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தினர்.

மனுவில் அவர்கள் குறிப்பிட்டதாவது:
“ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் சாயப்பட்டறைகள் அமைப்பது குறித்து மக்கள் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இது மக்கள் நலனை புறக்கணிக்கும் நடவடிக்கையாகும்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான குடிநீர், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து பெறப்படுகிறது. இங்கு சாயப்பட்டறைகள் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர் கடுமையாக மாசடையும் அபாயம் உள்ளது. இதனால் சேலம் மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படும்,” என அவர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை, ஜாகிர் அம்மாபாளையம் மக்கள் இன்று காலை சேலம்–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஜவுளி பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள இடத்திற்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“சாயப்பட்டறை திட்டத்தை அரசு உடனடியாக ரத்து செய்து மாற்று திட்டத்தை கொண்டு வர வேண்டும். இல்லையெனில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறும்,”
என்று எச்சரித்தனர்.

இந்த போராட்டத்தில் உள்ளூர் மக்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அரசை உறுதியாக நடவடிக்கை எடுக்குமாறு கோரினர்.

செய்தி: ஜி. சபரீஸ், சேலம் மாவட்ட நிருபர்

 

By TN NEWS