Wed. Nov 19th, 2025

“எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை திரும்ப பெற வேண்டும் – எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்”

“தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் கோரிக்கை.”

கடையநல்லூர், நவம்பர் 7, 2025

தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர் வாக்காளர் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான கணக்கெடுப்பு, வெளிமாநிலத்தவர்களை சேர்க்கும் சதி நடக்கிறது!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த நெல்லை முபாரக் கூறியதாவது:

“தமிழகத்தில் தொடங்கியுள்ள எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை எஸ்டிபிஐ வன்மையாக கண்டிக்கிறது. தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்போ அல்லது ஒரு வருடத்திற்கு பிறகோ தான் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தற்போது நடைபெறும் கணக்கெடுப்பு சட்டவிரோதமானது.

SIR எனப்படும் கணக்கெடுப்பு படிவங்களை விநியோகிப்பதில் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இதுகுறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. தமிழகத்தில் வெளிமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்க்கும் சதி நடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெளிநாட்டில் உள்ளோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் குறித்து தெளிவான வழிகாட்டுதலும் இல்லை. ஏழரை கோடி வாக்காளர்களின் பட்டியலை சரி செய்வதற்கு இரண்டு மாதங்கள் போதாது. எனவே, எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்.”

“தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு” – நெல்லை முபாரக்:

செய்தியாளர்கள் “இது தமிழக அரசு கட்டுப்பாட்டில் நடைபெறும் கணக்கெடுப்பு அல்லவா?” எனக் கேட்டதற்கு அவர் விளக்கமளித்தார்:

“கணக்கெடுப்பை நடத்த தேர்தல் ஆணையம் தான் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டியுள்ளது. எனவே, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் வரும் வரை எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்.”

“தமிழக மக்களின் உணர்வுகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கின்றவர்களையே மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்,” என நெல்லை முபாரக் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்:

மண்டல செயலாளர் சிக்கந்தர், மாவட்டத் தலைவர் திவான் ஒலி, மாவட்ட பொருளாளர் யாசர்கான் எம்.சி, மாவட்ட செயலாளர் சீனா சேனா சர்தார், கடையநல்லூர் நகரத் தலைவர் வழக்கறிஞர் லுக்மான் ஹக்கீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அமல்ராஜ்

தலைமை செய்தியாளர்

தென்காசி மாவட்டம்

#எஸ்டிபிஐ, #நெல்லை முபாரக், #எஸ்.ஐ.ஆர், கணக்கெடுப்பு, #தேர்தல் ஆணையம், #கடையநல்லூர், #தென்காசி, #வாக்காளர் பட்டியல்.

By TN NEWS