Thu. Nov 20th, 2025

வெறிநாய்கடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க கண்துடைப்பு நாடகத்தை விட்டுவிட்டு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் SDPI மாவட்ட செயற்குழுவில் தீர்மானம்..!

தென்காசி மாவட்ட #SDPI கட்சியின் செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் திவான் ஒலி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் செய்யதுமஹ்மூத், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஷேக்முகம்மது ஒலி, மாவட்ட செயலாளர்கள் சீனா, சேனா.சர்தார்,நூர்முகம்மது, மாவட்ட பொருளாளர் யாசர்கான் M.C., மகளிரணி மாவட்ட தலைவர் பரக்கத்நிஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி தொகுதி தலைவர் பீர் முகம்மது, துணைத்தலைவர் பாதுஷா, கடையநல்லூர் தொகுதி தலைவர் ஹக்கீம் சேட்,வாசு தொகுதி தலைவர் அப்துல்ஹமீது, ஆலங்குளம் தொகுதி செயலாளர் அப்துல்அஜீஸ், தொகுதி பொருளாளர் செய்யதுபாசில், சங்கரன்கோவில் தொகுதி தலைவர் நிசார்முகம்மது, தொகுதி செயலாளர் கனி ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும், பூத்கமிட்டி பொறுப்பாளர்களின் செயல்பாடுகள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம்  -1

கடையநல்லூர் நகர பகுதிகளில் தொடர்ந்து வெறிநாய்கடியினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது சம்மந்தமாக பலமுறை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், மனுஅளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனபோக்கோடு செயல்பட்டுவருகின்றது.வெறிநாய்கள் பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியும், பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பை தட்டிக்கழிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இனிமேலும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கைபார்ப்பதை விட்டு விட்டு வெறிநாய்களை அப்புறப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தீர்மானம் -2

தென்காசி நகராட்சிக்குட்பட்ட தினசரி காய்கறி சந்தை வாய்க்கால்பாலம் அருகில் இயங்கி வருகின்றது. இங்கு சுமார் 120 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடந்த 40 வருடங்களாக வியாபாரம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் பழைய காய்கறி சந்தையை இடித்து விட்டு கலைஞர் நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் 5 கோடி ருபாய் செலவில் புதியகட்டிடம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய கட்டிடத்தில் கடைகள் நடத்துவதற்காக பொதுஏல அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏலத்தை ரத்து செய்து,  ஏற்கனவே கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கே கடைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வியாபாரிகள் போராடி வருகின்றனர். மேலும் ஏலத்தை பங்குபெற ரூ. 4 லட்சம் வைப்புத்தொகையாக செலுத்த வேண்டும் எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சிறிய வியாபாரிகள் மிகவும் பாதிக்கப்படும் சூழல் உருவாக்கியுள்ளது. ஆகவே நகராட்சி நிர்வாகம் வைப்புத்தொகையை குறைத்து, சிறுவியாபாரிகள் பாதிக்காதவண்ணம் இப்பிரச்சனையில் உரிய தீர்வை எட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் -3

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகலிருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிமவளங்கள் அண்டைமாநிலமான கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றது. கனிமவள லாரிகள் அதிகபாரம் ஏற்றிச்செல்வது, நேரக்கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மீறிசெல்வதால் அன்றாடம் விபத்துக்கள் ஏற்படுகின்றது.இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த அக்டோபர் 4, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் தலைமையில் கிரஷர் உரிமையாளர்கள், லாரி ஓட்டுநர்களை அழைத்து ஆலோசனை வழங்கப்பட்ட்டது. ஆனால் தொடர்ந்து காவல்துறையின் உத்தரவை மீறும் வகையில் கனிமவள லாரிகள் செயல்பட்டு வருகின்றது. ஆகவே காவல்துறையின் உத்தரவை மீறி செயல்படும் கனிமவள லாரிகளை பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்ட குவாரிகளின் உரிமைத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம் -4

கடையநல்லூர் நகராட்சியில் நிரந்தர ஆணையாளர் இல்லாமல் மக்கள் பணிகள் முடங்கி கிடைப்பதை SDPI கட்சியின் சார்பில் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. தொடர்ந்து கடந்த அக்டோபர் 5,கடையநல்லூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கட்சியின் மாநில தலைவர் நெல்லைமுபாரக் அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில் தற்போது நகராட்சிக்கு நிரந்தர ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ளார். உரிய நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு செயற்குழு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றது.

உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறப்பட்டன.
மாவட்ட செயலாளர் அப்துல் பாசித் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

தலைமை செய்தியாளர்: ஜெ  .அமல்ராஜ் மாவட்ட தலைமை நிருபர்.   தென்காசி மாவட்டம்.

By TN NEWS