வேலூர் மாவட்டம், குடியாத்தம், அக்டோபர் 11:
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, குடியாத்தம் தாலுகா மேல்முட்டுக்கூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ். சுந்தர் தலைமையிலும், துணைத் தலைவர் நித்யாவாசு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கூட்டத்தின் போது, ஊராட்சி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உள்ளி கூட்ரோட்டில் அமைந்துள்ள 10 ஏக்கர் நிலப்பரப்பில் திடக்கழிவு மற்றும் மக்குப்பை கிடங்கை ரத்து செய்யவும், அதே இடத்தில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் தடுக்கவும் மக்களால் மனு அளிக்கப்பட்டது.
மக்களின் குறைகளை கேட்டறிந்த எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி பின்னர் ஊரகப் பகுதியை நேரில் ஆய்வு செய்து, செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:
“குடியாத்தம் நகரிலிருந்து வரும் மக்குப்பைகள் இந்த இடத்தில் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இங்கு சுற்றியுள்ள ஆறு கிராமங்கள் பாதிக்கப்படக்கூடும். இந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், நிலத்தடி நீர் மாசுபட்டு குடிநீர் விஷத்தன்மை அடையும் அபாயம் உள்ளது. துர்நாற்றம் மற்றும் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பும் உள்ளது. மக்கள் நலனை கருத்தில் கொண்டு, இதை சட்டமன்ற கூட்டத்தில் நான் முன்வைத்து நடவடிக்கை எடுப்பேன்,” என்றார்.
இந்நிகழ்வில் புதிய பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் மேகநாதன், நிர்வாகிகள், ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி: கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
