Sun. Oct 5th, 2025



வேலூர் மாவட்டம் குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, குடியாத்தம் போக்குவரத்து காவல்துறை, கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணியை செப்டம்பர் 19 அன்று நடத்தியது.

இந்த விழிப்புணர்வு பேரணியை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி ஊர்வலத்தில் காவல்துறையினர், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களிடம் வலியுறுத்தினர்.

பின்னர் காந்திநகரில் உள்ள போக்குவரத்து காவல் நிலையத்தில் நூலகம் மற்றும் ஆக்சிசன் செறியூட்டும் அறையை எஸ்.பி. மயில்வாகனம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார், நகர காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், கே.வி.குப்பம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், ரோட்டரி முன்னாள் ஆளுநர் ஜே.கே.என். பழனி, வழக்கறிஞர் கே.எம். பூபதி, ரோட்டரி சங்க தலைவர் சந்திரன், முன்னாள் ரோட்டரி தலைவர் வாசுதேவன், முன்னாள் ரோட்டரி கேலக்ஸி தலைவர் குமரவேல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இறுதியில், போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாமிகண்ணு, விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS