Mon. Oct 6th, 2025

உட்கட்சி சர்ச்சையால் சவாலில் நெல்லை மாநாடு – தூத்துக்குடி காங்கிரஸ் புறக்கணிப்பு தீர்மானம் பரபரப்பு

தூத்துக்குடி, செப்டம்பர் 6:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாடு இன்று (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நெல்லை பெல் பின் மைதானத்தில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கலந்து கொள்கிறார் என்பதால், இந்த மாநாடு பெரும் திரளான மக்கள் கலந்து சிறப்புடன் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் உட்கட்சி முரண்பாடுகள் காரணமாக, மாவட்ட நிர்வாகிகள் திடீரென மாநாட்டை புறக்கணிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் மாநாட்டைச் சுற்றி பெரும் பரபரப்பு நிலவுகிறது.

பெருமாள்சாமி தலைமையில் முடிவு.

மாநில ஐஎன்டியுசி., பொதுச் செயலாளர் பெருமாள்சாமி தலைமையில் தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து, மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்தனர்.

அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்,

“மாநில மாநாடு குறித்து தூத்துக்குடியில் நடத்தப்பட்ட கூட்டங்கள், பொதுமக்கள் இடங்களில் நடத்தப்பட வேண்டுமென பலமுறை கேட்டும், மாநில தலைமை புறக்கணித்துள்ளது.

அதற்கு பதிலாக ஒரே அணியைச் சேர்ந்தவர்களின் இடங்களில் கூட்டங்களை நடத்துவது சரியல்ல.

பொது இடங்களில் கூட்டம் நடத்த பொருளாதார வசதி இல்லையெனில், அதற்கான செலவினை கட்சித் தொண்டர்கள் தாமே ஏற்கத் தயாராக உள்ளனர்.

வடக்கு மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாவட்டத் தலைவர் பதவி காலியாக உள்ளது. இதையும் நிரப்ப மாநிலத் தலைமை நடவடிக்கை எடுக்கவில்லை.” எனக் கூறப்பட்டுள்ளது.


மாநாட்டின் மீது தாக்கம்.

இந்த அறிவிப்பு நெல்லை மாநாட்டைச் சுற்றியுள்ள சூழ்நிலையை சவாலானதாக மாற்றியுள்ளது. தூத்துக்குடி காங்கிரஸ் நிர்வாகிகள் மாநாட்டில் பங்கேற்காமல் இருப்பது, மாநில மாநாட்டின் வலிமையை குறைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஆனாலும், பெருமாள்சாமி அறிக்கையின் இறுதியில்,
“என்றைக்கும் ராகுல் காந்தி அவர்களின் பின்னால் அணிவகுப்போம்; காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவே இருப்போம். ஆனால், மாநில தலைமை மீது எங்களது அதிருப்தி தொடர்கிறது.” எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு.

இந்த திடீர் புறக்கணிப்பு தீர்மானம், மாநில காங்கிரஸ் தலைமைக்கே நேரடியான சவால் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே உட்கட்சி பிரிவினைகள் அதிகரித்துள்ள நிலையில், இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மாநாட்டை புறக்கணித்திருப்பது, மாநில மாநாட்டின் அரசியல் தாக்கத்தையும், கட்சியின் உள்ளக ஒற்றுமையையும் சோதனைக்கு உட்படுத்துகிறது.

✍️ சிறப்பு செய்தி:

அமல்ராஜ்

தென்காசி மாவட்டம்

தமிழ்நாடு டுடே முதன்மை செய்தியாளர்.

By TN NEWS