சமூக ஆர்வலரின் புகாருக்கு பின் நடவடிக்கை – விற்பனையாளர் பணியிட மாற்றம்.
திருப்பூர், ஆக.29 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கழிவறையில் மக்களுக்கு வழங்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக ஊடகங்களில் வெளியான தகவல் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்விபரீத நிலையை கண்டித்த சமூக ஆர்வலர், முதல்வர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் அளித்தார். அதில், “மக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை இத்தகைய அலட்சியமான முறையில் சேமித்தது கண்டிக்கத்தக்கது. பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் டி.ஆர். கீதாராணி, சமூக ஆர்வலருக்கு அனுப்பிய கடிதத்தில், சம்பவம் தொடர்பான விசாரணை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில்,
ஓசூர் வட்டம் பழைய டெம்பிள் லேண்ட் அட்கோ முகவரியில் இயங்கிய ரேஷன் கடை கட்டுமானப் பணிகளால், கடந்த 8 மாதங்களாக உழவர் சந்தை வளாகத்தின் கடை எண்-14ல் தற்காலிகமாக செயல்பட்டு வந்ததாகவும்,
அங்கு பொருட்களை இறக்கி வைக்கும் போது, அது கழிவறை நோக்கிச் செல்லும் நடைபாதையில் தற்காலிகமாக வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், சம்பவம் வெளியானதை அடுத்து உடனடியாக அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் திரும்ப அனுப்பப்பட்டு, மாற்று பொருட்கள் பெறப்பட்டு, பாதுகாப்பான முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுத்து அவரை மாற்றியுள்ளதாகவும், புதிய பணியாளர் நியமிக்கப்பட்டு தற்போது குற்றச்சாட்டின்றி பொருட்கள் வழங்கப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமர் – திருச்சிராப்பள்ளி