தஞ்சாவூர் ரயில்வே நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகள், இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர், ஆகஸ்ட் 22:
தஞ்சாவூர் ரயில்வே நிலையம் தொடர்பான சீரமைப்பு பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும், நுழைவு வாயில்களில் பெரிய கோவில் வடிவ முகப்பு அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தி அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்பில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கோரிக்கைகள் முன்வைத்தோர்
இன்று காலை 11.30 மணியளவில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தார்.
மூத்த வழக்கறிஞர்கள் கோ. அன்பரசன், சி. சந்திரகுமார், பொறியாளர் ஜோ. ஜான் கென்னடி, வணிகர் சங்க பேரமைப்பு மாநகர செயலாளர் ஆர். ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முக்கிய கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்,
தஞ்சாவூர் ரயில்வே நிலைய சீரமைப்பு பணிகள் ஓராண்டுக்கு முன்பே முடிக்கப்பட வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரரின் தாமதத்தால் இன்னும் திறக்கப்படவில்லை. இதனை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும்.
சீரமைப்பு பணியின் போது ஏற்கனவே இருந்த பெரிய கோவில் வடிவ முகப்பு அகற்றப்பட்டு, வடநாட்டு கோவில் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. இது நீக்கப்பட்டு, இரண்டு நுழைவு வாயில்களிலும் பெரிய கோவில் வடிவமுகப்பே அமைக்கப்பட வேண்டும்.
இண்டர்சிட்டி விரைவு ரயில் பூதலூரில் நிறுத்தம் செய்ய வேண்டும்.
நிறுத்தப்பட்ட பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்.
திருச்சி–வேளாங்கண்ணி ரயிலில் பயணிகள் மிகுதியாக இருப்பதால் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.
என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் பங்கேற்பு
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவர் காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை. பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோ. சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில துணைத்தலைவர் இரா. அருணாச்சலம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். ஜெயினுல் ஆப்தின், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் சு. பழனிராஜன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மக்கள் இயக்கங்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் முடிவில் இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் முதன்மை செய்தியாளர் :
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்