Wed. Oct 8th, 2025

 


நாகர்கோவில்:
மத்திய அரசின் வேலை நியமனங்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, “அன்பு தேசம் மக்கள் இயக்கம்” சார்பில் நூதன போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தை, நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பில், அச்சங்கத்தின் தலைவர் இரத்தினமணி நடத்தினார். போராட்டத்தின் போது, தனது உடம்பையே சாட்டையால் அடித்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்:

“நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் பிற்படுத்தப்பட்ட சாதியினராக உள்ளனர்.

ஆனால் மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் அவர்களுக்கு போதிய அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.

சமூக நீதி நிலைநிறுத்தப்பட வேண்டுமெனில், மத்திய அரசு 70 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மாநில அரசும் இதற்கான பரிந்துரையை வலியுறுத்தி மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும்” என்றார்.


மேலும், தன்னுடைய நூதன போராட்டம் மூலம், சமூக சமத்துவம் மற்றும் வேலை வாய்ப்பில் பின்தங்கியோருக்கான உரிமையை அரசுகள் உணர வேண்டிய அவசியம் இருப்பதாகவும் வலியுறுத்தினார்.

இந்த போராட்டத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், பலரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

செய்திகள்: ராமர் – திருச்சி



 

By TN NEWS