Thu. Aug 21st, 2025

சென்னை:

சவிதா பல்கலைக்கழகத்தின் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையம் சார்பில், ஜூலை 24ஆம் தேதி சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக மாற்றம் எனும் மூன்று முக்கிய தலைப்புகளில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மையத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அசோக்குமார் வீரமுத்துவின் வழிகாட்டுதலின் கீழ் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலிருந்து 450க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு திட்டமிடல் ஆணையத்தின் உறுப்பினரும், பாரம்பரிய மருத்துவ நிபுணருமான டாக்டர் ஜி. சிவராமன் கலந்துகொண்டு, சித்த மருத்துவத்தின் அறிவியல் அடிப்படைகள் மற்றும் நவீன வாழ்க்கையில் பாரம்பரிய உணவுப் பழக்கங்களின் அவசியம் குறித்து உரையாற்றினார்.

பல்கலைக்கழக நிறுவனர் தலைவர் டாக்டர் என்.எம். வீரையன், கல்வி என்பது பட்டங்களுக்காக மட்டும் அல்லாமல் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக இருக்க வேண்டும் என்று கூறினார். துணைத் தலைவர் டாக்டர் தீபக் நல்லசாமி வீரையன், மாணவர்கள் சமூகப் பொறுப்புடன் எதிர்காலத் தலைவர்களாக உருவாக வேண்டும் என வலியுறுத்தினார்.

துணைவேந்தர் டாக்டர் சுரேஷ்குமார், நவீன வாழ்க்கை முறைகள் மற்றும் உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை அதிகரித்து வருவதாகக் கூறி, பாரம்பரிய உணவு முறைகளுக்கு திரும்ப வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்துரையாடல்களில் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய மருத்துவம், இயற்கை வாழ்வு குறித்து கேள்விகளை எழுப்பினர்.

பல்கலைக்கழகம் தொடர்ந்து சமூக பொறுப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

விக்னேஷ்வர்.

By TN NEWS