இன்று ஏப்ரல் 20,சிவகங்கை சீமையில் 21 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது பாண்டியரின் 272வது ஜெயந்தி தினம் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலைக்கு அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கம் சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் நிறுவன தலைவர்,மக்கள் சேவகர் அப்பு பாலாஜி அவர்களின் தலைமையில் வேலூர்,திருவள்ளூர்,திருவண்ணாமலை,இராணிப்பேட்டை,காஞ்சிபுரம்,சென்னை மாவட்டங்களில் இருந்து சுமார் 50 வாகனங்களில் அணிவகுப்போடு சென்றனர்.
நிகழ்வின் முடிவில் செய்தியாளர் சந்திப்பில் இயக்கத்தின் தலைவர் அப்பு பாலாஜி அவர்கள் அளித்த பேட்டி பின்வருமாறு:
தலைநகர் சென்னையில் முதல் இந்திய சுதந்திர போராட்ட தியாகிகளான மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவச்சிலை அமைக்க வழிவகை செய்த முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தங்களுடைய நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,சிலை பீடத்தில் மாமன்னர் மருது பாண்டியர்கள் என்பதற்கு மாறாக மருது பாண்டியர்கள் என்று கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும்,விரைந்து இந்த தவறை அரசு முன்வந்து மாற்றியமைக்க வேண்டும்,தவறும் பட்சத்தில் தமிழக அளவில் உள்ள அனைத்து அகமுடையார் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அதே காந்தி மண்டப வளாகத்தில் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
முன்னதாக பேசிய அவர் கடந்த அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அப்போதைய விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் இராஜு ஆரணியில் கொடை வள்ளல் பச்சையப்ப முதலியாருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ஆட்சி மாறியவுடன் எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கவில்லை.இதுகுறித்து அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
இரண்டாவது கோரிக்கையாக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்ட துளுவ வேளாளர் அரசாணை குறித்த சமூக அநீதி பற்றி பேசினார்.
அகமுடையார் பிரதிநிதிகளை கலந்து ஆலோசனை நடத்தாமல்,அரசு சுயேட்சையாக செயல்பட்டு ஒரு வரலாற்று தவறை செய்துள்ளது.
அரசாணை வெளியிட்ட சில தினங்களிலேயே அக்டோபர் 24 மருது இளைஞர் இயக்கத்தின் சார்பில் துறை ஆணையருக்கும்,முதல்வரின் செயலருக்கும் அஞ்சல் வழியாக,வரலாற்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி கண்டன கடிதம் பகிரப்பட்டது.
ஆனால் இந்த நொடி பொழுது வரை அரசாங்கம் சார்பாக எந்தவொரு பதிலும் தரப்படவில்லை.தாமதிக்கும் பட்சத்தில் இயக்கத்தின் எதிர்வினை காட்டமாக இருக்கும் என்று சமூகத்தின் ஆதங்கத்தை தெரிவித்தார்.
த.சுதாகர் – வட சென்னை.