திருப்பூர்:
நாச்சிபாளையத்தில் வளர்ப்பு நாயை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாச்சிபாளையம் கிறிஸ்டின் தெருவைச் சேர்ந்த யோவான் என்பவரின் மகன் இஸ்ரவேல், கடந்த 13 ஆண்டுகளாக “சச்சின்” என பெயரிடப்பட்ட நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த 6-ஆம் தேதி (06.04.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், நாய் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றது. அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
தொடர்ந்து நடக்கும் தேடலிலும் நாய் கிடைக்காத நிலையில், அவரது வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள கம்பிவேலியில், தலையில் அடிபட்ட நிலையில் சடலமாக நாய் கிடந்தது.
சம்பவத்துக்கான காரணம் பற்றி அக்கம் பக்கத்தினரை விசாரித்த இஸ்ரவேல், அருகில் வசிக்கும் பாபு என்பவரின் மகன் அருண் நாயை அடித்து கொன்று, சாக்கில் கட்டி அருகிலுள்ள முட்புதரில் வீசியதாக தகவல் பெற்றார்.
இதையடுத்து, People for Animals அமைப்பின் தலைவி நளினி அவர்களிடம் புகார் அளித்த இஸ்ரவேல், அவருடைய ஆலோசனையின் பேரில் அவிநாசி பாளையம் காவல் நிலையத்தில் அருண் மீது புகார் செய்தார்.
புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அருண் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாச்சிபாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரவணக்குமார்