தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற விழாக்களுக்கு பாதுகாப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி அயராது பணியாற்றியதன் பின்னணியில், அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் லத்தி மற்றும் துப்பாக்கி கவாத்து பயிற்சிக்கு மாற்றாக, காலை நடை பயிற்சி (Road Walk & Run) நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நடை பயிற்சி தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. தமிழினியன் அவர்களின் மேற்பார்வையில், தென்காசி காவல் நிலைய சரகம் குத்துக்கல்வலசையில் நடைபெற்றது. இதில், உட்கோட்டத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களால் காவலர்களுக்கான மன மகிழ் விளையாட்டுகள் (Mind Games) நடத்தப்பட்டது. இந்த விளையாட்டு நிகழ்ச்சியில் காவல் அலுவலர்கள் தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியுடன் பங்கேற்று, சிரித்தும் கேலியுடன் மகிழ்ந்தும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
விளையாட்டில் வெற்றி பெற்ற காவலர்களை காவல் அதிகாரிகள் கைத்தட்டி பாராட்டினர். இந்த நிகழ்ச்சி காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டு, அனைவராலும் பாராட்டப்பட்டு வெகுவாக வரவேற்றது.
தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர் அமல் ராஜ்.
