*தமிழக-கேரளா எல்லையில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை, இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பிரித்து வழங்க வேண்டும்*
*கேரளாவில் இருந்து அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க வரும் கருப்பு பண முதலைகளை சட்டப்படி அப்புறப்படுத்த வேண்டும்*
அனைவருக்கும் வணக்கம்
நீண்ட காலமாக தமிழக கேரள எல்லையில் நமக்கே தெரியாத ஒரு சம்பவம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக செங்கோட்டை தாலுகாவில் நாங்கள் 50 ஆண்டுகளாக குடியிருக்கிறோம்,100 ஆண்டுகளாக குடியிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய கேரளாவைச் சேர்ந்தவர்கள், இங்கிருக்கும் பட்டா நிலங்களுக்கு புரோக்கர்களாக மாறி, கேரளாவை சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து அதை விற்று வருகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவிகளிடம் இப்படி அநியாயமாக பிடுங்கப்படும் நிலங்கள் கேரளாவை சேர்ந்தவர்களுக்கு தாரைவாக்கப்பட்டு, தமிழர்கள் தங்கள் பகுதியிலேயே வீடு அற்றவர்களாக, நிலமற்றவர்களாக மாறும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது வெளியில் தெரிவதில்லை. மறைமுகமாக இந்த வேலையை கோட்டைவாசல்,உட்கோணம், புளியரை பகுதியில் காலங்காலமாக வாழ்வதாக சொல்லப்படும் கேரளாகாரர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
செங்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் அனுதினமும் அப்பாவி தமிழர்களுடைய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும் மலையாள நாட்டு வண்டிகள் குவிந்து கிடக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த நில மோசடி குறித்து அரசும் காவல்துறையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இப்படி நடக்கும் இந்த மோசடிக்கு மூலதனம், வளைகுடா நாடுகளில் சம்பாதிக்கப்படும் கருப்பு பணம்.
எவ்வளவு பெரிய பணம் வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாக்காரர்களால் கொண்டுவரப்பட்டாலும், அங்கு வாங்குவதற்கு நிலம் இல்லாத நிலையில், அனைவரும் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள்.
இதற்கு தமிழக கேரள எல்லையில் வாழும் கேரள புரோக்கர்கள், வழிகாட்டுதல் செய்து தமிழர்களுடைய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி குவித்து வருகிறார்கள்.
இந்த வேலையை இவர்கள் கர்நாடகாவில் செய்து விட முடியாது. ஆந்திராவில் செய்து விட முடியாது. ஆனால் திறந்த வெளி காடாக இருக்கும் தமிழகத்தில் கனகச்சிதமாக இந்த வேலையை அரங்கேற்றி வருகிறார்கள்.
தமிழகத்தில் இவர்கள் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு வாங்குவதற்கு,நம்மவர்களே வெறும் ஐந்துக்கும் பத்துக்கும் விலை போய் உதவி வருவதால்,வேலை எளிதாக நடக்கிறது.
கூடுதலாக தமிழ்நாட்டிலும் ரேஷன் கார்டு,ஆதார் அட்டை வாங்கும் இந்த மோசடி பேர்வழிகள்,நம் தமிழ்நாட்டு அரசை ஏமாற்றி கேரளாவில் அதே அட்டைகளை வைத்திருப்பதை,மத்திய உளவுத்துறை கவனமாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.
கருப்பு பணத்தை நிலங்களை வாங்குவதன் மூலம் வெள்ளையாக்கும் இவர்கள்,
சமீபகாலமாக இன்னொரு வேலையையையும் செய்து வருகிறார்கள்.அதாவது தமிழக கேரள எல்லையோரங்களில், தமிழகத்தில் இருக்கும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள்,ரயில்வேய்க்கு சொந்தமான நிலங்கள், போன்றவற்றிற்கு 2 சி பட்டாவை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டு,கோலோச்சி வருவது வெட்டவெளிச்சமாகி இருக்கிறது.
பட்டா நிலங்களை விட்டு வைக்காத இவர்கள், இப்போது புறம்போக்கு நிலங்களின் பக்கம் திரும்பி இருப்பது பெருத்த வேதனைக்குரியது.
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு ஆயிரக்கணக்கானோர் செங்கோட்டை தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் நிலையில், அந்த அப்பாவிகளின் வயிற்றில் அடித்து, இவர்கள் வந்து ஆதிக்கம் செலுத்துவது, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மட்டுமல்ல, தண்டனைக்குரியதும் கூட.
எனவே பிற மொழியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இது போன்ற அரசு புறம்போக்கு, ரயில்வே நிலங்களை உடனடியாக செங்கோட்டை தாசில்தார் அவர்கள் கணக்கெடுப்பு செய்து,
அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து ரயில்வே நிலங்களிலிருந்து இது போன்ற கேரள நபர்களை அப்புறப்படுத்துவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்குத் துணை போகும் தமிழக புரோக்கர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து, அவர்களையும் குற்றவாளி பட்டியலில் இணைக்க வேண்டும்.
கூடுதலாக இப்படி கேரளாவைச் சேர்ந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் அரசு புறம்போக்கு ரயில்வே நிலங்களை இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காத்திருக்கும் மாற்று திறனாளிகளுக்கு பட்டா போட்டு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறோம்.
இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் முறையான விண்ணப்பங்களை அனுப்புகிறோம்.
அது தொடர்பாக விரைவில் செங்கோட்டையில் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் பொறுப்பாளர்களை அழைத்து வந்து ஆலோசனைக் கூட்டமும் நடத்த இருக்கிறோம்.
அனைத்து நிலை மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.
அமல்ராஜ் – முதன்மை மாவட்ட செய்தியாளர் – தென்காசி மாவட்டம்.


