Thu. Jun 4th, 2026

சமூக சேவகர் எம். கோபிநாத் மனிதநேய பணிக்கு பாராட்டு…!

குடியாத்தம், ஜூன் 3:

வேலூர் மாவட்டத்தில் ரயில்வே பாதையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத இரு ஆண் சடலங்களுக்கு சமூக சேவகர் ரோட்டேரியன் எம். கோபிநாத் தனது சொந்த செலவில் இறுதிச்சடங்கு செய்து நல்லடக்கம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் 6ஆம் தேதி வாலாஜா பகுதியிலும், மே 15ஆம் தேதி சோளிங்கர் பகுதியிலும் ரயில்வே பாதையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சுமார் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க இரு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த சடலங்களை காட்பாடி ரயில்வே போலீசார் கைப்பற்றி, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளம் மற்றும் உறவினர்களை கண்டறிவதற்காக பல்வேறு வழிகளில் தகவல் வெளியிட்டு தேடியும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, அடையாளம் தெரியாத சடலங்களை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டி, காட்பாடி ரயில்வே போலீசார் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும், உயிர் அறக்கட்டளையின் நிறுவனருமான சமூக சேவகர் ரோட்டேரியன் எம். கோபிநாதை தொடர்புகொண்டு உதவி கோரினர்.

இதனைத் தொடர்ந்து, எம். கோபிநாத் நேரில் சென்று தேவையான ஆவணங்களைப் பெற்று, இறந்தவர்களின் உடல்களைப் பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், வேலூர் மாநகராட்சியின் வழிகாட்டுதலின்படி உரிய மதிப்பும் மரியாதையும் அளித்து இறுதிச்சடங்குகளை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தனது சொந்த செலவில் வேலூர் பாலாறு இடுகாட்டில் இரு சடலங்களையும் நல்லடக்கம் செய்தார்.

இந்த பணிக்குத் தேவையான ஆவணங்கள் மற்றும் சட்டரீதியான அனுமதிகளை காட்பாடி ரயில்வே போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த சக்திவேல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் மற்றும் உடல் தான விழிப்புணர்வு சேவைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் சமூக சேவகர் எம். கோபிநாத், ஆதரவற்ற மற்றும் அடையாளம் தெரியாதவர்களின் இறுதிச் சடங்குகளையும் மனிதநேய அடிப்படையில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த மனிதநேய செயல் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS