Thu. Jun 4th, 2026

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை…!

குடியாத்தம், ஜூன் 3:

வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டத்தில் கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள், லுங்கி உற்பத்திக்கான கூலியை குறைத்ததை திரும்பப் பெற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைத்தறி தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் 16 மீட்டர் நீளமுடைய 8 லுங்கிகள் அடங்கிய ஒரு செட்டிற்கு கடந்த செப்டம்பர் மாதம் வரை ரூ.2,200 கூலியாக வழங்கப்பட்டு வந்ததாக நெசவாளர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் திடீரென அந்த கூலியில் ரூ.200 குறைக்கப்பட்டு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் நெசவாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த துணைத் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நெசவாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெயவேலு தலைமையிலும், ஓ.பி.சி. அணி மாநில துணைத் தலைவர் ஜெலேந்திரன் முன்னிலையிலும், நெசவாளர்கள் ஜே. சிதம்பரம், பி. லாலாஜபதி, கே.இ. சரத் சந்தர், ஜி. குணசேகரன், ஜி. நேரு, ஜே. கந்தன், சி. தண்டபாணி உள்ளிட்டோர் இன்று காலை குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனலட்சுமியிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.

மனுவில், நெசவாளர்களுடன் இணைந்து நூல் இழைத்தல், தார் சுற்றுதல், தறி பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் உள்ளிட்ட துணைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் இந்த கூலி குறைப்பு நேரடி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ரூ.200 கூலி குறைக்கப்பட்டதன் காரணமாக ஒவ்வொரு தொழிலாளருக்கும் மாதந்தோறும் சுமார் ரூ.1,000 வரை வருமான இழப்பு ஏற்படுவதாகவும், ஏற்கனவே மாதம் ரூ.10,000 வருமானம் கூட பெற முடியாத நிலையில் உள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, லுங்கி உற்பத்தியாளர்கள் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, கூலி குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி, மீண்டும் பழையபடி ரூ.2,200 கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கே.வி. ராஜேந்திரன்,
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்.

By TN NEWS