குடியாத்தம், மே 28, 2026
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதியின் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், குடியாத்தம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. க. சிந்துவை, தாழை சிலம்பு பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
சிலம்புக் கலை வாத்தியார் சிவக்குமார் தலைமையில் வந்த மாணவர்கள், புதிதாக திறக்கப்பட்ட எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சிந்துவைச் சந்தித்தனர். மாணவர்கள் தங்கள் சார்பில் எம்.எல்.ஏ. க. சிந்துவுக்குப் பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி மரியாதை செலுத்தினர்.
மாணவர்களின் முக்கிய கோரிக்கைகள்:
இந்தச் சந்திப்பின்போது, சிலம்பம் பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு தனி இடவசதி ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், சிலம்புக் கலைக்கு அரசு வேலைவாய்ப்பில் தற்போது வழங்கப்பட்டுள்ள 3 சதவீத ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
எம்.எல்.ஏ. சிந்து பதில்:
மாணவர்களின் கோரிக்கைகளைப் பொறுமையாகக் கேட்டறிந்த எம்.எல்.ஏ. க. சிந்து, இந்தக் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்க அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும், மாணவர்களின் கோரிக்கைகளை சட்டப்பேரவையில் முன்னிறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வு குடியாத்தம் பகுதியில் சிலம்புக் கலையின் வளர்ச்சிக்கு முக்கியமானதொரு படிக்கட்டாக அமைந்துள்ளது.
செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுகா
