Mon. May 25th, 2026

பத்திரிக்கை செய்தி வெளியீடு…!

தேதி: 23.05.2026

விழுப்புரத்தில் பெண்ணின் 6 பவுன் தாலி செயினை பறித்த மர்ம நபர் கைது – தங்கச் சங்கிலி மீட்பு.

விழுப்புரம் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரயில்வே காலனி அருகே, கடந்த 18.05.2026 அன்று திங்கட்கிழமை, கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலி செயினை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சாய் பிரநீத் அவர்களின் உத்தரவின் பேரில் சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளி சென்ற வழித்தடங்களில் உள்ள 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதன் மூலம் குற்றவாளி அடையாளம் காணப்பட்டு தீவிரத் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், சனிக்கிழமை (23.05.2026) அன்று பானாம்பட்டு இரயில்வே கேட் அருகில், காவல் ஆய்வாளர் திரு. கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் திரு. ராஜேஷ் மற்றும் திரு. லியோ சார்லஸ், மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர், குற்றவாளி பிரகாஷ் (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செல்போன், இருசக்கர வாகனம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் 6 பவுன் தாலி செயின் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

சிறப்புச் சாதனை:
விழுப்புரம் மாவட்ட காவல்துறையின் சீரிய முயற்சியால் இதுவரை 9,000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் (CCTV) மாவட்டம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளன. குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும், நடைபெறும் குற்றங்களை விரைந்து கண்டறிவதற்கும் “மூன்றாம் கண்” எனப்படும் CCTV கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன.

பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறும், எவையேனும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறும் விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ். மதியழகன்
மாவட்ட முதன்மை செய்தியாளர்
விழுப்புரம் மாவட்ட காவல்துறை

By TN NEWS