Sat. May 23rd, 2026

கன்னியாகுமரி, மே 22:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் கடற்கரைப் பகுதி, சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் சமீபத்தில் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணிகளில் உள்ளூர் மக்களின் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பணியமர்த்தப்பட்டு, கடற்கரை பராமரிப்பு மற்றும் நுழைவுக் கட்டுப்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடற்கரைக்கு வரும் பயணிகளிடமிருந்து ஒருவருக்கு ரூ.20 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கையால் கடற்கரை பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்து கடலின் இயற்கை அழகையும், அலைகளின் காட்சிகளையும் ரசித்து வருகின்றனர். இன்று காலை முதல் மழை பெய்திருந்தாலும், இடையிடையே வெயில் காணப்பட்டதால் கடற்கரையில் இனிமையான சூழல் நிலவியது. எனினும், வானிலை மாற்றம் காரணமாக வழக்கத்தை விட சுற்றுலாப் பயணிகள் கூட்டம் சற்றுக் குறைவாகவே காணப்பட்டது.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக கடற்கரையில் குடிநீர், கழிப்பிட வசதிகள், அமரும் இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடற்கரை துப்புரவு மற்றும் கழிவு மேலாண்மைப் பணிகள் திறமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சி, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, உள்ளூர் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு டுடே, கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்: ஷாலு V. J.

By TN NEWS