Thu. May 21st, 2026

மேல்மலையனூர், மே 21: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் தாலுகாவில் உள்ள கோட்டப்பூண்டி ஏரியில், சட்டவிரோதமாக வண்டல் மண் திருட்டு நடைபெற்றுவரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இத்திருட்டு வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் உதவியுடன் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.

10 டிராக்டர்களில் மண் கடத்தல்:

கோட்டப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை மற்றும் சாலை அமைப்பதற்காக, அதே கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக சட்டவிரோதமாக வண்டல் மண் எடுத்து வருகிறார். ஜேசிபி இயந்திரம் மூலம் ஏரியில் ஒரு ஆள் உயரத்திற்குப் பள்ளம் தோண்டி, சுமார் 10 டிராக்டர்களில் மண் கடத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தலுக்குப் பின்னும் தொடரும் திருட்டு:

சட்டமன்றத் தேர்தல் நடைமுறைக் காலத்தில், தமிழகம் முழுவதும் வண்டல் மண் எடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியாகி, தவெக ஆட்சி பதவியேற்ற பத்து நாட்களுக்குள் மீண்டும் வண்டல் மண் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் உதவி குறித்த சந்தேகம்:

“இவ்வளவு பெரிய அளவில், பகல் பொழுதிலேயே மண் திருட்டு நடப்பது வெளிப்படையான சட்ட மீறலாகும். இதைத் தடுக்க வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அதிகாரிகளின் உதவியுடன்தான் இத்திருட்டு சாத்தியமாகியுள்ளது” என கோட்டப்பூண்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடனடி நடவடிக்கை கோரிக்கை:

ஏரியில் இருந்து சட்டவிரோதமாக வண்டல் மண் எடுப்பது கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பையும், நீர்நிலையின் அழிவையும் ஏற்படுத்தும் என்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்: கே. மாரி, விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்

By TN NEWS